சுலைமான் றாபி, கபூர் நிப்றாஸ்,சம்சுல் ஹுதா-
சுகாதார அமைச்சரின் பொத்துவில் இணைப்பாளர் எம்.அன்வர் சதாத் இன் விசேட வேண்டுகோளை ஏற்று சுகாதார அமைச்சர் டாக்டர்.ராஜித சேனாரத்ன பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு (16) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம்,சுகாதார அமைச்சரின் பொத்துவில் இணைப்பாளர் அன்வர் சதாத், சுகாதார் வைத்திய அதிகாரிகள் மற்றும் முன்னாள் பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளர் AMM.தாஜுதீன் ,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எ.எம்.எம்.இஸ்ஸடீன் வைத்தியசாலையில் நிலவும் குறைகளையும் மக்களின் தேவைகளையும் சுகாதார அமைச்சருக்கும் சுகாதார பிரதி அமைச்சருக்கும் எடுத்துக்கூறினார்.
இதனைத்தொடர்ந்து உரையாற்றிய சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம்:
பொத்துவில் வைத்தியாசலையின் குறைபாடுகளை தான் அறிந்துள்ளதாகவும் அது பற்றி அமைச்சருக்கு எடுத்துக்கூறியுள்ளதாகவும் தன்னாலான உதவிகளை எதிர்வரும் காலங்களில் செய்வேன் எனவும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து உரையாற்றிய சுகாதார அமைச்சர் டாக்டர்.ராஜித சேனாரத்ன:
பொத்துவில் வைத்தியசாலைக்கு சிறுநீரக சிகிச்சை பிரிவு ஒன்றை வழங்குவதாக கூறிய அதே வேளை அவசர விபத்து சிகிச்சை பிரிவு ஒன்றையும் வைத்தியர்களுக்கான விடுதி கட்டிடம் ஒன்றையும் எதிர்வரும் இரண்டு வருடத்திற்குள் அமைத்து தருவதாகவும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
இவ்வைத்தியசாலையை வைத்திய அத்தியட்சகரின் தலைமையில் சிறப்பாக வழிநடத்தவுள்ளதாகவும் அவர் இடமாற்றம் பெற்று சென்றால் தகுதியான வேறொரு வைத்திய அத்தியட்சகரை நியமித்து வழிநடத்தவுள்ளதாகவும்,
இவ்வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப்பற்றாக்குறையை நிறைவு செய்து தருவதாகவும் தெரிவித்தார் , இதன் போது வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து உரையாடிய அமைச்சர் வைத்தியசாலை ஊழியர்களுடனும் உரையாடினார்.





