அணியும் செருப்பு சிறியது என்பதற்காக கால் கட்டை என்று கவலைப்படுவதா?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

பாலமுனையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மகாநாட்டை அங்கு நடத்தக் கூடாது. மற்றும் நாளை (17) குருணாகலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேராளர் மகாநாட்டை நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தப்பட்டாலும் அது சட்டவிரோதம். அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்திகளே கடந்த மூன்று தினங்களாக இலங்கை முஸ்லிம் அரசியலில் பரவிக் காணப்படுகின்றன.

இவற்றையெல்லாம் படிக்கும் போது, சிறுபான்மைக் கட்சிகள் இந்த நாட்டில் இருக்கக் கூடாது,சிறுபான்மை இனத்தின் அரசியல் தலைமைகள் சிங்கள தேசிய அரசியல் கட்சிகளுடன் இணைந்தே அரசியல் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி சிறுபான்மைக் கட்சிகளையும் அதன் அரசியல் தலைமைகளையும் அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு தென்னிலங்கை சிங்கள அரசியல்வாதிகளும் கட்சிகளும் சில பௌத்த தேரர்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் நாமே நமது கட்சிகளை அழித்து விடுவோமா என்ற அச்சம் என்னுள் தோன்றியுள்ளது.

நாளை குருணாகலில் நடைபெறவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேராளர் மகாநாடு தொடர்பில் அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமான வை.எல்.எஸ். ஹமீத் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இந்தக் கட்சியின் முன்னாள் முக்கியஸ்தருமான சுபைர் ஆகியோர் காரசாரமான அறிக்கைகளை விட்டுள்ளனர். அந்த அறிக்கைகள் மிகவும் பாரதூரம் கொண்டனவாகவே அமைந்துள்ளன. 

வை.எல்.எஸ.ஹமீத் மற்றும் சுபைர் ஆகியோரின் அறிக்கைகள் தொடர்பில் எந்தக் கருத்துகளையும் இந்தச் சந்தர்ப்பத்தில் என்னால் கூற முடியாது. அவர்கள் தங்களது நிலைப்பாட்டையே தெரிவித்துள்ளனர். சட்ட ரீதியாக தான் நடவடிக்கை எடுக்கப் போவதாக ஹமீத் தெரிவிக்க, சுபைர் மிகவும் ஆக்ரோஷமாக அதற்கு ஒருபடி மேல் சென்று முடிந்தால் வடக்கு, கிழக்கில் நடத்திப் பார்க்கட்டும் என்று சவால் விட்டுள்ளார்.

இவர்கள் இருவரது அறிக்கைகளுக்கும் பிரதியமைச்சரும் கட்சியின் தவிசாளருமான அமீர் அலி பதிலளித்துள்ளார். அனைத்து சவால்களையும் தான் ஏற்பதாகவும் இறைவன் நாட்டப்படியே அனைத்தும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சிகளுக்குள் பிரச்சினைகள், முரண்பாடுகள், பிரிவுகள், பிணக்குகள் ஏற்படுவதும் பின்னர் அவை சரி செய்யப்படுவதும் சாதாரண விடயம். சில விடயங்கள் அல்லது சிலர் தொடர்பில் இணக்கம் ஏற்படாத போதும் பலவற்றில் ஐக்கியம் ஏற்பட்டு விடுவதே நிஜம்.

வடமாகாணத்தை மையமாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது அந்த மாகாணத்தைக் கடந்து குருணாகலில் தனது பேராளர் மகாநாட்டை நடத்துகிறது. இது ஒரு வரலாற்றுப் பதிவாகப் போகும் ஒரு விடயம். அந்தக் கட்சி வடக்கு, கிழக்கு என்ற எல்லைக்கு அப்பால் சென்று இன்னொரு மாவட்டத்தில் கால்பதிப்பது அதன் எதிர்கால நலனுக்கும் ஒரு படியாக அமைவதுடன். அந்த மாகாணத்தில் வாழக் கூடிய முஸ்லிம்களின் அரசியல் பலத்துக்கும் ஒரு நதிமூலமே.

இவ்வாறானதொரு நிலையில் வை.எல்.எஸ்.ஹமீத் அவர்களும் சுபைர் அவர்களும் கட்சியுடனான பிரச்சினைகளை ஒரு பக்கமாக வைத்து விட்டு, எமது மக்கள், எமது சமூகக் கட்சி என்ற அடிப்படையில் இந்த விடயத்தை நோக்கி, விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டால் என்ன? வைத்தியசாலைக்குப் போனால் குணமாக வேண்டும் அல்லது பிணமாக வேண்டுமென்ற நிலைப்பாடு இல்லாமல் குணமாகியயே வீடு திரும்ப வேண்டும் என்று நல்ல நோக்கத்தில் சிந்தித்தால் சிறப்பானதுதானே?

எங்களுக்குள் எழும் பிரச்சினைகளை நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்தானே? அதனை விடுத்து உங்கள் அனைவராலுமே வளர்க்கப்பட்ட ஒரு கட்சியை உங்களுக்குள் பிர்ச்சினை என்பதால் அந்தக் கட்சிக்கோ தலைமைத்துவக்கோ எதிராகச் செயற்படுவது நல்லது இல்லைதானே? கட்சி,தலைமை இவைகள் எமது சமூகத்துக்குரியன அல்லவா?

ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன் அவதானியுங்கள். வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ விக்னேஸ்வரன் ஐயா அவர்களை முதலமைச்சராக்கியது தமிழரசுக் கட்சியே. (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு)

ஆனால், இன்று நிலைமை என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வட மாகாண முதல்வருக்குமிடையில் பலத்த கருத்து முரண்பாடுகள் வெடித்துள்ளன. இது பகிரங்கமான உண்மை. எது எப்படியிருப்பினும் ஒரு தமிழ் மகன் அல்லது தமிழர் சமுதாயம் ஏதோ ஒன்றால் அல்லது ஒரு வகையில் பாதிக்கப்படுவதாக உணர்ந்தால் இந்த இரு தரப்பும் தங்களது முரண்பாடுகளையும் கட்சிப் பிரச்சினைகளையும் ஒரு பக்கம் தூக்கி வீசிவிட்டு ஒன்றுபட்டு விடுகின்றனர் அல்லவா?

இவ்வாறானதொரு நிலைமை எமக்குள் ஏற்படக் கூடாதா? இதற்கான முன்னோடிகளாக வை.எல்.எஸ். ஹமீத் அவர்களும் சுபைர் அவர்களும் திகழ்ந்து வரலாற்றில் இடம்பிடிக்கக் கூடாதா? சிந்தித்து செயற்படுங்கள்.. எதனையும் அழிப்பது இலகு.. ஆக்குவது கடினம்தானே?

அணியும் செருப்பு சிறியது என்பதற்காக கால் கட்டை என்று கவலைப்படுவதா? ஏனெனில் கால் என்பது அமது ஓர் அங்கம் அல்லவா? அதனை நாம்தானே பாதுகாக்க வேண்டும். செருப்பு என்ற பிரச்சினையை தக்கியெறிவதுதான சிறந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -