கல்குடாவில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் அவசரக்கூட்டம்..!

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் தொடர்பில் ஆராயும் கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் அவசரக்கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது.

முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அல்ஹாஜ் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் முஹாஜிரீன் ஆசிரியர் இல்லத்தில் நேற்று 21.01.2016ம் திகதி வியாழக்கிழமை மாலை 7.00 மணிக்கு இடம்பெற்ற இவ்வசரக் கூட்டத்தில், பல்வேறு விடயங்களும், தேசியப்பட்டியல் கல்குடாவுக்கு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும், அதற்கான நியாயப்படுத்தல்கள் பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

ஐக்கிய தேசிய கட்சியுடனான புரிந்துணர்வின் மூலம் முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் யாருக்கு, எப்பிரதேசத்திற்கு வழங்குவதென்ற இறுதித்தீர்மானம் எடுக்கின்ற வரைக்கும் தற்காலிகமாக அமைச்சர் கெளரவ அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் சகோதரர் டாக்டர் ஹபீஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

பாராளுமன்றத்தேர்தல் முடிந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் டாக்டர் ஹபீஸ் அவர்கள் தனது உத்தியோகபூர்வ இராஜினாமாவை கையளித்துள்ளார்.

இந்நிலையில், தேர்தலின் பின்னர் கல்குடாவிலுள்ள முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களைச் சந்தித்த கெளரவ தலைவர் அமைச்சர் அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள், கல்குடாவுக்கான முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருந்தாலும், கல்குடாவில் ஏற்பட்ட கட்சிக்கான ஆதரவு அலையினால் பல்வேறு சாவல்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதிநிதித்துவம் காப்பற்றப்பட்டிருக்கின்றது.

தேசிய ரீதியில் முஸ்லிம் காங்கிரஸிற்கான ஒரேயொரு பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட அர்ப்பணிப்புடன் களத்தில் போராடிய கட்சிப்போராளிகளைக் கெளரவிக்குமுகமாகவும் வாக்களித்த மக்களின் நலன், பிரதேச அபிவிருத்தி கருதியும், கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகளை, கல்குடாவின் வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸால் படிந்துள்ள வரலாற்றுத் தவறுகளை நிவர்த்திக்குமுகமாகவும் கல்குடாவில் மென்மேலும் கட்சி வளர்ச்சியினைக் கவனத்திற்கொண்டு தேசியப்பட்டியலினை வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தார்.

அதே நேரத்தில், கல்குடாவுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையே வரலாற்றுத் தொடர்பிருப்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பம் முதல் இன்று வரை முஸ்லிம் காங்கிரஸுக்கு நாடாளவிய ரீதியில் பெயர் போன இடமாகக் கருதப்படுவது கல்குடாப் பிரதேசமாகும். அதனை யாரும் மறக்கவோ மறைக்கவோ முடியாது என்பது நாமறிந்த உண்மை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற ஆசனத்தை உறுதிப்படுத்துவதில் இப்பிரதேசத்துக்கு அதிக பங்குள்ளதென்பது வரலாற்று ரீதியான உண்மையாயினும், அண்மையில் இடம் பெற்ற தேர்தல் மூலமே மக்களால் அனுபவத்தில் உணர்ந்து கொள்ள முடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர், காத்தான்குடிப் பிரதேசங்களில் தனி நபர்களின் ஆதிக்கம் ஒரு பக்கமும், கட்சியின் ஆதிக்கம் மற்றொரு பக்கமும் என இரு பகுதிகளாக காலாகாலந் தொட்டு இருந்து வருகின்ற நிலையில், கல்குடாவில் கட்சிக்கான ஆதரவே மிகைத்துள்ளமை யதார்த்தம்.

ஆனால், எமது கல்குடாப்பிரதேசத்தைப் பற்றி அன்று எமது மறைந்த தலைவர் மர்ஹூம் அஸ்ரப் சொன்னது போல் முஸ்லிம் காங்கிரஸின் இதயம் கல்குடா என்று குறிப்பிட்டது போல, காலாகாலமாக முஸ்லிம் காங்கிரஸ் பல வேட்பாளர்களை தேர்தல் காலங்களில் இப்பிரதேசத்திற்கு அறிமுகப்படுத்தும். இம்மக்களோ முஸ்லிம் காங்கிரசை நம்பி வாக்களிப்பர். பின்னர் ஏமாற்றப்பட்டே வந்துள்ளமை வரலாறு.

இதுவரை காலமும் முஸ்லிம் காங்கிரஸில் கல்குடாவில் தேர்தலை எதிர்கொண்ட நடைமுறைகளை தகர்த்தெறிந்து, கடந்த வருடம் இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் முற்றிலும் மாற்றமாக எமது தேசியத்தலைவர் அவர்கள் நேரடியாக வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து, இளந்துடிப்புள்ள கணக்கறிஞர் H.M.றியாழ் அவர்களை நேரடியாகக் களமிறக்கி தேர்தலை முகங்கொடுக்கச் செய்தார் என்பது நாம் யாவரும் அறிந்த உண்மையே!!
தேர்தலின் பின்னர் இப்பிரதேசத்துக்கு வருகை தந்த தலைமை நாம் நிச்சயமாக றியாழ் அவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்குவேன் என்று கட்சிப்போராளிகள், படித்த சமூகத்தினரிடம் வாக்குறுதி வழங்கிச் சென்றதுடன், தற்போது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எனது சகோதரர் டாக்டர் ஹபிஸ் இராஜினாமாச் செய்தால், அது கண்டிப்பாக றியாழ் ஊடாக கல்குடாப் பிரதேசத்துக்கு வழங்கப்படும் என்று பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருந்தார்.

ஆகவே, தேசியத்தலைவர் தேர்தலின் பின்னர் வழங்கிய வாக்குறுதியை இன்ஷா அல்லாஹ் கட்டாயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் பல்வேறு சவால்கள், தூற்றுதல்களுக்கு மத்தியிலும் கடந்த சில மாதங்களாக தேசியத்தலைவரினதும், பிரதேச தலைமையான கணக்கறிஞர் றியாழ் அவர்களதும் வாக்குறுதிகளுக்கும், கட்டளைக்கும் கட்டுப்பட்டு பொறுமையோடு காத்திருந்துள்ளோம்.

இப்போது காலம் கணிந்துள்ளதுடன், அதற்கான சரியான தருணம் இதுவாக அமைந்துள்ளது. 

ஆகவே, கல்குடாவுக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்றப்பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டிய நியாயமான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, கட்சியினது நலனையும், பிரதேச மக்களின் அபிவிருத்தியையும் இலக்காக வைத்து மிக விரைவில் தேசியத்தலைமை நல்ல முடிவை எடுக்க வேண்டுமென இத்தருணத்தில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் சமூக நலன்சார்ந்து சரியான தீர்வை சரியான நேரத்தில் எடுக்கும் தேசியத்தலைமை கடந்த காலங்களிலும், கடந்து போன தேர்தலிலும் நாங்கள் சிந்திய இரத்தத்திற்கும் கண்ணீருக்கும் கல்குடா தொடர்பில் சரியான முடிவை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

இறுதியாக, தேசியப்பட்டியல் எனும் அரசியல் அதிகாரம் வழங்கப்படுவதன் மூலமே மூலமே எமது கல்குடா மண்ணில் எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முற்று முழுதாக வேரூன்றும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி, மேற்படி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை அறிக்கையாகத் தயாரித்து, கட்சியின் சகல மட்ட போராளிகளும் கையொப்பமிட்டு தலைவருக்கு கையளிப்பதென ஏகமானதாகத் தீர்மானிக்கப்பட்டது.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -