இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோருக்கு கடிதம் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த கடிதங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் முத்திரையுடன் காணப்படுவதாக கோவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
கோவா மாநில தலைமைச் செயலகத்திற்கு கடந்த வாரம் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதை பிரித்து படித்தபோது அதில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோரை கொலை செய்யப் போவதாகக் கூறி ஐ.எஸ்.ஐ.எஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவா பொலிஸார் இந்த கடிதத்தை நகல்கள் எடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கை தீவிரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடிதம் வந்து ஒரு வாரம் ஆகிய போதிலும் அது குறித்து பொலிஸார் நேற்றே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் அதிகாரி கூறுகையில், மிரட்டல் கடிதம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதை யார் அனுப்பியது என்பதை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம். கடிதத்தின் கீழ் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது எனத் தெரிவித்தார்.
