இக்பால் ஜெம்சாத் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - இளைஞர் காங்கிரஸின் செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக ஒவ்வொரு ஊரிலும் செயற்பட்டு வரும் இளைஞர் காங்கிரஸ் புனரமைக்கப்படவிருக்கின்றது.
அவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம், இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுத்தீன் அவர்களின் தலைமையில் இளைஞர் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
இளைஞர் காங்கிரஸின் அடுத்த வருடத்திற்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக இளைஞர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவதோடு, ஒவ்வொரு ஊருக்குமான இளைஞர் காங்கிரஸ் நிருவாக குழுவின் புதிய உறுப்பினர்களையும் தெரிவு செய்யவுள்ளனர்.
தெரிவு செய்யப்படும் இளைஞர் காங்கிரஸ் நிருவாக குழுவின் ஊடாகவே அடுத்த வருடம் திட்டமிடப்பட்டுள்ள இளைஞர் காங்கிரஸின் தேசிய வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விஜயத்தின் போது தெரிவு செய்யப்படும் நிருவாக குழு உறுப்பினர்களுக்கு தலைமைத்துவ வழிகாட்டல் மற்றும் பயிற்சிகளை வழங்க அடுத்த வருடம் ஜனவரி மாதம் முழு நாள் கருத்தரங்குகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.
