றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலையாளிகளுக்கு அரசாங்கத்தின் உயர்மட்ட ஆதரவு கிடைத்து வருவதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணைகளை முடக்குவதற்கு உயர் அதிகாரம் கொண்ட மறைகரங்கள் முயன்று வருவதாக பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது பல்வேறு முறைகேடுகளுக்குத் துணை நின்ற அதிகாரிகள் பலரும் தொடர்ந்தும் அதே பதவிகளில் நீடிப்பதன் காரணமாக ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து விசாரணைகளுக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வசீம் தாஜுதீன் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கங்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்ள பொலிசார் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் அனுசரணை சிறிதும் கிட்டவில்லை.
அதே போன்று வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பாக முக்கிய தடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, குறித்த சம்பவம் கொலை என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நீதித்துறைக்கும் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த சம்பவத்தை கொலை என்று அறிவித்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட வேண்டிய நீதித்துறை, இது தொடர்பாக இன்னும் ஆராய்ந்த பின்னரே முடிவை அறிவிக்க வேண்டியிருப்பதாக தீர்ப்பைத் தள்ளி வைத்துள்ளது என்றும் திவயின செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
