ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தின் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர தினம் நேற்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
கல்லூரி அதிபர் எஸ்.அஹமட் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நிந்தவூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், முன்னாள் அதிபர் எம்.எம்.றகீம், உள்ளிட்ட கல்விமான்கள், சாதனை புரிந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த(சா/த) பரீட்சை, உயர்தரப் பரீட்சை போன்றவற்றில் அனைத்துப் பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்ற மாணவர்கள், பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானோர், தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றோர் எனப் பல மட்டத்திலுள்ளோரும் மாகாணக் கல்விப்பணிப்பாளர் நிசாமினால் மாலையணிவித்து, நினைவுச்சின்னம், பரிசுப்பொருட்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பிரதம அதிதி மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிசாம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-
ஒரு மாணவருக்குள் ஒரு வைத்தியர் உறங்கிக் கொண்டிருப்பார் அது உங்களுக்குத் தெரியாது. ஒரு மாணவருக்குள் ஒரு பொறியலாளர் உறங்கிக் கொண்டிருப்பார். அது உங்களுக்குத் தெரியாது. ஒரு விஞ்ஞானி உறங்கிக் கொண்டிருப்பார். ஒரு மிகப் பெரிய டெரக்டர் உறங்கிக் கொண்டிருப்பார். ஒரு அதிபர், ஆசிரியர் எனப் பல்வேறு கதாபாத்திரங்கள் உறங்கிக் கொண்டிருக்கும். அதில் உங்களுக்குப் பொருத்தமானவர் எவர் என்பதைக் கண்டறிந்து தட்டி எழுப்புவதும், அதுவாக உங்களை உருவாக்குவதும் ஆசிரியரின் கடமையும், பொறுப்புமாகும்.
இப்பணியிலிருந்து அவர்கள் தவறுவார்களாயின் அதனை இனங்கண்டு கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுக்குரியது. அதனை நீங்கள் இணங்காண வேண்டும். எனவே, வாழ்க்கையில் நீங்கள் ஒரு போதும் தோல்வி அடைந்து விடக்கூடாது. நும்பிக்கை இழந்து விடக்கூடாது. தோல்வி என்பது நிரந்தரமானதல்ல எனத் தெரிவித்தார்.







