எம்.ஏ.றமீஸ்-
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அண்மையில் இடம்மாற்றம் பெற்று வருகை தந்த சுகாதார உதவியாளர்களுக்கான மேற்பார்வையாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரி வைத்தியசாலை வளாகத்தில் சுகாதார உதவியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினையும் மேற்கொண்டனர்.
ஆர்பாட்டம் நடைபெற்ற அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு உடனடியாக விஜயம் செய்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் ஆர்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை கையேற்று இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசின் சுகாதாரத்துறையினருக்கு தெரியப்படுத்தி எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் தகுந்த தீர்வினை வழங்குவதாகவும் உறுதியளித்தார். இதனையடுத்துஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு ஏனைய சுகாதார உதவியாளர்களின் கையெழுத்துக்களையும் பெற்றுக் கொண்டசுகாதார உதவியாளர்கள் வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் எம்.ஜே.நௌபலிடம் தமதுகோரிக்கைகளை கையொப்பமிட்டு வழங்கி வைத்தனர். இதன்போது பதில் வைத்திய அத்தியட்சகர் இவ்விடயத்தினைஉயரதிகாரிகளுக்கும் சுகாதாரத்துறையினருக்கும் தெரியப்படுத்தி இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளதாகதெரிவித்தார்.
குறித்த சுகாதரா உதவியாளர்களுக்கான மேற்பார்வையாளர் கடந்த 2013 மற்றும் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வேளையில் பல அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதுடன் பல்வேறான ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர். இவரை மீண்டும் இவ்வைத்தியசாலைக்கு நியமித்தமையானது நல்லாட்சியில் கறை படிந்த விடயங்களை சுகாதாரத் துறைக்கு ஏற்படுத்துவதாக அமையும் எனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இவ் உத்தியோகத்தரின் நடவடிக்கைகளால் குறிப்பிட்ட சொற்ப காலத்திற்குள் அம்பறை மாவட்டத்திலுள்ள சிலவைத்தியசாலைகளில் இடமாற்றப்பட்டும் இவ் வைத்தியசாலைகள் இவரை ஏற்றுக் கொள்ளாதால் இறுதியாக பொலன்னறுவை போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு சொற்ப காலத்தினுள் மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளார். இவரது மேற்பார்வையில் நாம் கடமையில் ஈடுபடமாட்டோம் என இரண்டு முறை வைத்தியசாலை நிருவாகத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளோம். உடனடியாக இவரை வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுக் கொடுக்காவிடின் தொடந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட சுகாதார உதவியாளர்களுக்கான மேற்பார்வையாளரை வினவியபோது,
நான் நிரந்தர சுகாதார உதவியாளர்களுக்கான மேற்பார்வையாளராவேன். சுப்பர் கிறேட்டில் உள்ள நான் 30 வருடங்களாக சுகாதாரத் துறையில் சேவையாற்றி வருகின்றேன். எனது சேவைக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன் சிலரின் சுய நல பதவிக்காகவே இவ்வார்ப்பாட்டமும் பணிப்பகிஷ்கரிப்பும் இடம்பெற்றது.
நான் கடந்த 2013, 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வைத்தியசாலையிலேயே சேவையாற்றி வந்தேன். அக்காலப்பகுதியில் சாதாரண சுகாதரா உதவியாளர் ஒருவரை எனது பதவிக்கு நியமிக்கும் பொருட்டு அமைச்சர் ஒருவரின் சிபார்சினையும் பெற்று என்னை வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று அனுப்பும் வகையில் எனக்கு பல்வேறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பல நெருக்கடிகளை சிலர் தந்து கொண்டிருந்தனர். இதனைதாங்கிக் கொள் முடியாமல் போன நான் தானாக சுய விருப்பின்பேரில் இடமாற்றம் பெற்றுச் சென்றேன்.
அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள சில வைத்தியசாலைகளில் நான் இடமாற்றம் பெற்றுசென்றபோதிலும் வெற்றிடம் இல்லாமையால் பொலன்னறுவை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டேன். அங்கும் எனக்கான வெற்றிடமின்மையால் தற்காலிக இடமாற்றம் பெற்றுச் சென்ற என்னை மீண்டும் அக்கரைப்பற்றுஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். நான் இதுவரை தற்காலிக இடமாற்றம் சென்று வேறு வைத்தியசாலைகளில் கடமையாற்றியபோதிலும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலேயே சம்பளத்தினைப்பெற்று வந்தேன்.
இவ்விடயத்தினை சம்பந்தப்பட்ட ஐந்து இடங்களுக்கு நான் தெரியப்படுத்தி வந்ததால் எனது பதவிக்கான வெற்றிடம் இங்குள்ளதால் என்னை மீண்டும் இவ்வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். எனக்கு குற்றம் சுமத்துபவர்கள் சொல்வதைப்போல் நான் எந்த முறைகேடான விடயங்களிலும் ஈடுபடவில்லை. அவ்வாறான எந்தத் தேவையும் எனக்கில்லை. எனது சுய கோவையில் எந்தக் குற்றமும் இதுவரை சுமத்தப்படவில்லை. நான் குற்றமற்றவன். சிலரின் பதவியாசையாலேயே இவ்விடயம் நடைபெறுகின்றது என்றார்.





