பெங்களூரில் 11–வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. காதலன் விபத்தில் பலியானதால் அந்த பெண் விபரீத முடிவை தேடிக் கொண்டது தெரியவந்துள்ளது.
பெங்களூரு பேட்ராயனபுரா அருகே வசித்து வந்தவர் பூஜா(வயது 21). இவர், கப்பன் பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கஸ்தூரிபா ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் தான் வேலை செய்யும் நிறுவனத்தின் 11–வது மாடிக்கு சென்ற பூஜா திடீரென்று கீழே குதித்தார்.
இதில், அவரது தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இதுபற்றி அறிந்ததும் கப்பன் பார்க் போலீசார் மற்றும் மத்திய மண்டல துணை கமிஷனர் சந்தீப் பட்டீல் விரைந்து சென்று பூஜாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதமும் போலீசார் கையில் சிக்கியது.
அதில், ‘தற்கொலை முடிவை நான் எடுத்திருக்கக்கூடாது. ஆனாலும் அப்படி செய்ய வேண்டியதாகி விட்டது‘ என்று மட்டும் பூஜா எழுதி இருந்தார். பின்னர் பூஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பவுரிங் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், பூஜா வேலை செய்த அதே நிறுவனத்தில் ஜே.சி.நகரை சேர்ந்த சரண் என்பவர் வேலை செய்துள்ளார். அப்போது 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு சரணும், பூஜாவும் காதலித்துள்ளனர். இந்த நிலையில், பெங்களூர் புறநகர் நந்திமலைக்கு தனது நண்பர்களுடன் சென்ற சரண் விபத்தில் சிக்கி பலியாகி விட்டார்.
நேற்று காலையில் சரணின் இறுதி சடங்கு நடந்துள்ளது. இதில், கலந்து கொண்டு விட்டு நிறுவனத்திற்கு வேலை செய்ய வந்த பூஜா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. காதலன் விபத்தில் பலியானதால் மனம் உடைந்த பூஜா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

