மனிதர்களின் பிழையான நடத்தைகளுக்கு துணையாகும் தொடர்பு சாதனங்களின் பயன்பாடு..!

ருவர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார். சில நிமிடங்களில் அவரது கால்சட்டையினுள் இருக்கின்ற செல்பேசியிலிருந்து ஒலி அலறுகிறது. ஒருகையினால் செல்பேசியினை எடுத்து காதிற்;கு அருகில் கொண்டு செல்கின்றார். இவ்வேளையில் அவரது மற்றொருகை மோட்டார் சைக்களின் வேகத்தோடு இணைந்து கொள்கிறது. 

பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த பார ஊர்தியின் சத்தமும், அது செல்கின்றபோது ஏற்படுகின்ற காற்றின் வேகமும் இணைந்து அவரது மோட்டார் சைக்கிளை ஆட்டம் காணச்செய்கிறது. ஒருகையில் கைபேசி, மறுகையில் மோட்டார் சைக்கிள் கைபிடி. இரண்டுக்குமே ஈடுகொடுக்க முடியாத அந்த நபர் கீழே விழுகின்றார். பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவர் மோதுண்டு படுகாயத்திற்கு உள்ளாகின்றார். கைபேசியை தவறாக பாவித்தமையினால் பாரியதோர் விபத்திற்கு வழிசேர்க்கிறது.

இன்றைய காலகட்டத்தில் அதிகமான வீதி விபத்துக்களுக்கு காரணமாக கைத்தொலைபேசியினை கவனமின்றி பயன்படுத்துவதால் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் வெளியிடப்பட்ட புதிய அரசின் 2016ஆம் ஆண்டிற்கான பஜட்டில்கூட வீதி விபத்திற்கு உள்ளாகின்ற நபர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் இவ் யுகத்தினை ஆக்கிரமித்துள்ள தகவல் தொடர்பு சாதனங்களின் வருகை கட்டற்ற தன்மையினை கொண்டுள்ளது. 

அதனைப் பிழையாக வழிநடாத்தி, அநியாயமாக பல உயிர்களைக் காவு கொள்வதற்கும், நிரந்தர நோயாளியாக்குவதற்கும், உடல் உறுப்புக்களை இழப்பதற்கும் கால்;கோளாய் அமைகின்றன என்பது அண்மைக்காலமாக அனைவராலும் கூறப்படுகின்ற விடயமாகும். இருந்தாலும் கைத்தொலைபேசிப் பாவனையின் பயனை பரிபூரணமாக பயன்படுத்தும் தன்மை இன்று உலகையே ஆக்கிரமித்துள்ளது. 

பிரயாணத்தின்போது அழைப்புக்கள் வந்தால், நின்று நிதானித்துப் பேசும் அளவுக்கு எம்மிடம் பொறுமை இருக்கின்றதா என்றுபார்த்தால் அதுகூட இல்லை. அவசர அவசரமாக கவனமற்றமுறையில் கையாள்கின்றபோது தானும் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது, மற்றவர்களையும் அல்லவா தவிக்கச் செய்கின்றோம். 

பொதுவாக இன்று எவரது கையிலும் கைபேசி. ஒருவர் மற்றவரோடு பேசுவதைத் தவிர்த்து போனில் தனது நேரத்தைக் கழிப்பவராகவே இருப்பார். அருகில் யார் இருந்தால் என்ன இருக்காவிட்டால் என்ன பஸ்ஸில் பயணிக்கின்றபோது தானும் தனது கைபேசியும் என்கிற நிலைக்கு இன்று மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சிலவேளைகளில் சிலர் கைபேசியில் பேசுகின்றபோது அருகில் இருப்பவர்களை மறந்து பேசுவார். 

சண்டைகள் பிடிப்பார்கள். ஏசுவார்கள். கெட்டவார்த்தைகளையும் கூறுவார்கள். சிலநேரங்களில் கைபேசியின் சத்தத்தை அருகில் இருப்பவர்களும் கேட்கும் வண்ணம் உறவாடுவார்கள். இவ்வாறெல்லாம் எத்தனையோ விதமான உணர்வுகளுடன் இன்று அனைவரையும் ஆட்கொண்டுள்ள கைபேசியின் பாவனை அதிகரித்துக் கொண்டுதான் செல்கின்றது. 

நவீன ரக கைபேசிகள் ஊடாக உலகையே தன்கைக்குள் கொண்டுவந்துள்ள இன்றைய நவீனத்துவமிக்க கைபேசிகள் மனிதர்களை குறிப்பாக இளசுகளை பிழையான வழிகளுக்குள் உட்படுத்திவிடுகின்றது என்பதுதான் இன்றைய பெற்றோர்களின் கவலையாகும்.

வானொலியில் அல்லது தொலைக்காட்சியில் பாட்டுக் கேட்கின்றபோது தொலைபேசியின் ஊடாக கேட்கப்படுகின்ற வினாக்கள்கூட சில வேளைகளில் வானொலியைக் கேட்டுக் கொண்டிருக்கின்றவர்களை தர்ம சங்கடத்திற்குள்ளாக்கி விடுவதும் உண்டு. 

உதாரணமாக 'நீங்கள் யார் யாருக்காக பாட்டினை விரும்பிக் கேட்கிறீர்கள் என்று அறிவிப்பாளர் கேட்டால் வெளிநாட்டிலுள்ள தனது கணவனுக்காக என்று அந்த மனையாள் கூறுகின்றாள். 

அறிவிப்பாளர் மீண்டும் வீட்டில் யார் யார் எல்லாம் இருக்கின்றார்கள் என்ற வினாவுக்கு நானும் எனது இரண்டு வயது மகளும் என்பாள் அந்த நேயர். வீட்டில் இன்று என்ன சமையல் என்கிற வினாவுக்கு அவள் ஏதோ சமையல் என்பாள். நாங்களும் வந்தால் தருவீர்களா என்றுகேட்பார் அறிவிப்பாளர். ஆம் வாருங்கள் உண்போம். தருவோம் என்று இன்னும் என்னவோ எல்லாம் பேசுவார்கள். தன்னையும், தனது குடும்பத்தையும் உலகறியச் செய்வதில் அப்படியொரு மகிழ்ச்சி. 

இவ்வாறு தொலைபேசியின் ஊடாக சகஜமாகப் பழகும் நிலைக்கு அந்த மனையாள் உந்தப்படுகிறாள். இது பிழையான வழிநடாத்துகைக்குக்கூட வித்திடலாம். கணவன் வெளிநாட்டில் அல்லது வெளியூரில் வேலை பார்க்கும்போது, மனையாள் குறிப்பாக இளசுகளின் கண்களுக்கு இவ்வாறான உரையாடல்கள் பிழையான நடத்தைக்கு வழிவகுப்பதாக அமையலாம்.

ஆக்கத்திற்கும், இலகுவான முறையில் மனித செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்குமாகத் தயாரிக்கப்பட்ட தகவல் தொழிநுட்பத்துறையை பிழையான வழிக்கு இட்டுச் செல்வதில் இன்று இளசுகளும், சிறியோர்களும் கூர்மையுடன் காணப்படுகின்றனர். அத்தனை கவர்ச்சிகளும் அங்கே பொதிந்துள்ளன. மனநோயை ஏற்படுத்துமளவுக்கு அதில் பித்துப்பிடித்தலைகின்றவர்களையும் பார்க்கின்றோம். 

உலகில் வெப்தளத்தில் பாலியல் தொடர்பான தேடுதலில் இலங்கை முன்னணியில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தளவுக்கு இன்று நிலைமை படுமோசமாகிவிட்டது. அறிவுவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டிய தொடர்பாடல் சாதனங்களை இளைய சமூகத்தினர் பிழையாக கையாள்வதன் மூலம் எதிர்காலத்தில் அனைத்து செயற்பாடுகளிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கலாம். இதனைத் தவிர்ப்பதற்குரிய ஏற்பாடுகளை பாடசாலை மட்டத்திலிருந்தும், பெற்றோர்கள் மட்டத்திலிருந்தும் குழந்தைகளை அவதானித்து சரியான வழிக்கு கொண்டுசெல்லவேண்டும்.

பொதுவாக கூறுவார்கள் தகவல் தொடர்பு சாதனங்கள் என்பது 'கருத்தை அல்லது தகவல் ஒன்றினை ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்ய உதவும் கருவிகள் என்பார்கள்' ஆரம்ப காலங்களில் இருந்தது போல ஒருவருடனான பேச்சு, சம்பாசனை, கூட்டங்கூடல் போன்ற வழிமுறைகளினாலான தொடர்பாடல்கள் இன்று அருகிவிட்டது. அத் தொடர்பாடலினை கருவிகளின் வழி நாம் மேற்கொள்கின்ற போது அவை தொடர்புசாதனங்களாகி விடுகின்றன. 

அத்தோடு இத் தொடர்புசாதனங்களின் வழி பெறப்படும் தகவல் பரிமாற்றமானது எத்தகைய தடங்களும் இன்றி ஒருவரை சென்றடைகின்றபோதுதான் அவை சமூகத்தில் பயனளிக்கின்றன அல்லது முழுமை பெறுகின்றன. இன்றைய காலகட்டத்தில் மிகவும் அதிகமாக கையாளப்படுகின்ற இத்தகவல் தொடர்பு சாதனங்களில் கைபேசி, இணையம் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன.

இன்றைய யுகத்தில் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக தகவல் பரிமாற்றம் காணப்படுகின்றது. மனிதன் ஒரு சமூகப்பிராணி என்பதால் தான் வாழும் சமூகத்தின் செல்வாக்கிற்கு உட்படாமல் அவனால் வாழமுடியாது. மொழி பழக்கவழக்கங்கள் ஒழுக்க முறைகள் கருவிகளின் பயன்பாடு ஆகிய அனைத்தையும் அவன் சமூகத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றான். இதனால் இன்றைய தொழில்நுட்ப யுகத்தினைக் கொண்ட சூழலில் தொடர்பு சாதனங்கள் ஒருவனது நடத்தையில் பலவாறாக செல்வாக்குச் செலுத்தும் தன்மையினை கொண்டுள்ளதையும் நாம் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. 

ஆனால் அது நம்மைத் தாண்டி நமது நன்னெறிகளுக்கும், நமது உயிருக்கும், நமது பிழையான நடத்தைக் கோலத்திற்கும் வழியாக அமையுமாக இருந்தால் அதன் பயன்பாடு அவசியம்தானா என்பதையும் சிந்திக்க வேண்டி உள்ளது. அதேவேளை இதன் உண்மையான பயன்பாட்டினையும் தாண்டி அதனை பிழையாக நாம் வழிநடாத்துவோம் என்பதாக அமையுமாக இருந்தால் பிழை எங்கே ஆரம்பிக்கிறது என்பதையும் நாம் சிந்தித்து உணர வேண்டியும் உள்ளது.

ஒருவர் மற்றொருவரின் முகத்தைப்பார்த்து பேசுவதற்குப் பதிலாக கைபேசியின் முகத்தைத்தான் பார்த்து பேசுகின்ற மனிதர்கள்தான் இன்று அதிகம். மரணவீடாகட்டும், திருமண வீடாகட்டும், சமய சாஷ்டான நிகழ்வாகட்டும், கோயில், பள்ளியாகட்டும், பாடசாலையாகட்டும், ஏன் சமய வழிபாட்டில் குறிப்பாக முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் தொழுகையின்போதுகூட சிலர் கைபேசியினை நிறுத்தாமல் ஈடுபடுகின்றனர். அந்தளவுக்கு மனிதர்களின் செல்லிலும் செல்பேசிகள் நிறைந்துள்ளன என்றுதான் கூறவேண்டும்.

உலகின் எந்தவொரு மூலையிலும் நடைபெறுகின்ற ஒரு செயற்பாட்டினை அடுத்த கணத்தில் பெற்றுக் கொள்ளும் வசதிகள் நிறைந்துள்ள இன்றைய தொழிநுட்ப உலகில் இணையத்தின் ஊடான முகநூல் அறிமுகம் கடும் தாக்கத்தினையும் செலுத்திவருகின்றது. அழைப்புக்களை மேற்கொள்ளவும், குறுந்தகவல்களை (ளுஆளு) அனுப்பவும் விம்பங்களாகவும், ஒளி, ஒலி முறைகளிலும் தகவல்களை வெளிக்கொணர்ந்து தேவையை பூர்த்தி செய்துகொள்ளவும் முடிகின்றது. 

பெரியவர்களின் கைகளிலிருந்த தொலைபேசிப் பாவனைகள் அடுத்த தலைமுறையினரான மாணவர்களிடமும் இதன் ஆதிக்கம் கடுமையான தாக்கதை உண்டுபண்ணியிருக்கிறது. இவை இன்று பாடசாலை மாணவர்கள் மத்தியில் சிந்தனையின் மையப் புள்ளியாகவும் விளங்குகின்றது. அவர்களின் அன்றாட வாழ்வியல் அம்சங்களில் பண்பாடு, விழுமியம், நெறிமுறைகள், கலாசார அம்சங்கள், உணவு பழக்க வழக்கங்கள், உறவு முறைகள் என அனைத்து அம்சங்களிலும் கைபேசிப்பாவனை பாரிய தாக்கத்தினை கொண்டுள்ளதையும் நாம் மறுக்க முடியாது.

இன்று பாடசாலை மாணவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இக் கைபேசிகளிடம் ஆட்சிறைக்குட்பட்டுள்ளனர் தமது கற்றலுக்கும், தேடலுக்குமாக மாத்திரமன்றி குறிப்பாக பெற்றோரிடம் தாம் எங்கிருக்கின்றோம் என்பதைத் தெரிவிக்க கொடுக்கப்பட்ட வாய்ப்பினை இந்த கைபேசியின் ஊடாக தனது கல்வியை மறந்து, கற்றலை மறந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பதில் ஆரம்பித்து பின்னர் காதல் வலையில் விழுந்து, சாதலில் போய் நின்ற வரலாறுகளை அண்மைக்காலமாக பல்வேறு சம்பவங்கள் ஊடாகப் பார்த்திருக்கின்றோம். 

 மாத்திரமன்றி தமக்குரித்தான கடமைகளைக்கூட மறந்து செயற்படுகின்ற அளவுக்கு சமூகத்தில் இதன் ஆக்கிரமிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கற்பிக்கின்றபோது ஆசிரியருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தவிட்டால் தான் பாடத்தில் இருப்பதாக கூறிவிட்டு பாடத்தைத் தொடராத நிலையில் அங்கே பாடத்திற்கான நேரம் வீண் விரயம் செய்யப்படுகின்றது. 40நிமிடப்பாடவேளையில் அவர் 10 அல்லது 20 நிமிடங்களை கைபேசியில் களவாடினால் பாடசாலை அதாவது அந்தச் சமூகம், பிள்ளையின் பெற்றோர் எதிர்பார்க்கின்ற அடைவினை மாணவனால் கொடுக்கத்தான் முடியுமா?

இவ்வாறான செயற்பாடுகளால் பாடசாலை மாணவர்களின் நேரம் வீண் விரயம் செய்யப்படுவதுடன் கற்றலின் பெறுமதிகள், இலக்கின் முக்கியத்துவம் குறைக்கப்படுகின்றது. இவர்களிடையே சமூக அக்கறை பற்றிய சிந்தனைகள் இல்லாது போவதுடன் தமது பொறுப்புக்கள், கடமைகள், எதிர்கால திட்டங்கள் பற்றி சிந்திக்கும் தன்மை முதலானவை கையடக்கத் தொலைபேசியின் பிழையான பாவனையால் குறைந்துபோகின்றது. 

எனவேதான் இன்றைய இளசுகளும்சரி, வயதானவர்களும் சரி அனைவரினதும் கவனத்தினைப் பெற்று, தனது சட்டைப்பைக்குள் நிறைந்துள்ள கைபேசிப் பாவனையின் யதார்த்தத்தைப் புரிந்து ஆக்கத்திற்கும், அறிவார்ந்த விடயத்திற்கும் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும், பிழையான வழியில் சென்று உயிரையும், உடமைகளையும் காவுகொள்வதிலிருந்து தன்னையும், தனது பின்னுள்ளவர்களையும் விடுதலைபெற கைபேசியினை சரியான முறையில் பயன்படுத்த உறுதிபூணுவோமாக.

அட்டாளைச்சேனை மன்சூர்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -