ஏ.ஏம்.றிகாஸ்-
74 முஸ்லிம் பாடசாலைகளை மாத்திரம் உள்ளடக்கிய மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வியலுவலகத்தின் சமாதான கல்விப் பிரிவினால் முதல் தடவையாக ஒழுங்குசெய்யப்பட்ட நத்தார் கலை, கலாசார விழா நிகழ்வுகள் வெகு கோலாகலமாக நடந்தேறியுள்ளன.
சமாதான கல்வி இணைப்பாளர் எம்ஜிஏ நாஸர் தலைமையில் வேள்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் மூன்று கட்டங்களாக நடாத்தப்பட்ட இந்நிகழ்வுகளில், வலயக் கல்விப்பணிப்பாளர் எம்ஐ சேகுஅலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
விஷேட அதிதிகளாக வேள்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் கிரான் ஏடிபீ முகாமையாளர் திருமதி ஹிந்து றோஹாஸ் குமாரஸ்வாமி, பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏஎஸ் இஸ்ஸதீன் மற்றம் கோட்டக்கல்வியதிகாரிகளான எம்.மீராசாஹிப் மற்றும் எம்ஏசீஎம். பதுர்தீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு, மட்டக்களப்பு மத்தி மற்றும் கல்குடா ஆகிய வலயங்களிலுள்ள 12 பாடசாலைகளைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மாணவர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர். இதன்போது மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் பாடசாலைகளுக்கும் அதிதிகளுக்கும் சினைவுச் சின்னங்கள் கையளிக்கப்பட்டன.
தியாவட்டவான் அறபா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற நத்தார் முதற்கட்ட நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த ஓட்டமாவடி மத்திய கல்லூரி, தியாவட்டவான் அறபா வித்தியாலயம் மற்றும் மீராவோடை - அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும், கல்குடா கல்வி வலயத்தில் கிரான் -மகா வித்தியாலயம் மற்றும் கோரகல்லிமடு - ரமணமகரிஷி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும் பங்கேற்றன.
ஓல்லிக்குளம் - அல்-ஹம்றா வித்தியாலயத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட நிகழ்வில் மட்டக்களப்பு-தாழங்குடா- சித்தி விநாயகர் வித்தியாலயம், காத்தான்குடி- பாலமுனை அலிகார் மகா வித்தியாலயம் மற்றும் ஒல்லிக்குளம்- அல்-ஹம்றா வித்தியாலய மாணவர்களது கலை, கலாசார நிகழ்வகள் அரங்கேற்றப்பட்டன.
இறுதிக்கட்டமாக ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலய மண்டபத்தில் நடாத்தப்பட்ட நத்தார் கொண்டாட்ட கலை,கலாசார நிகழ்வில் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயம், அறபா வித்தியாலயம், முறக்கொடாஞ்சேனை-இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயம் மற்றும் சந்திவெளி-ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் பங்கேற்றன.
நிகழ்வுகளில் கிரான் - மெதடிஸ்த தேவாலய குழுவினர் கரோல் கீதம் இசைத்தமை விஷேட அம்சமாகும். இதேவேளை, மாயாஜாலம் உள்ளிட்ட பல சாகச நிகழ்வுகளும் இங்கு அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








