ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவே நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததாகவும், காதல் விவகாரமொன்றே இதற்கு காரணம் எனவும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமை பலரும் அறிந்ததே.
இந்நிலையில், வசீம் தாஜுதீன் படுகொலை விசாரணைகளில் திடீர் திருப்பமொன்று ஏற்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமையவே தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக, புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைத் தகவல்களை ஆதாரம் காட்டி கொழும்பின் முக்கிய, முதன்மையான இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.
இக்கொலையின் முக்கிய சூத்திரதாரி நாமல் ராஜபக்ஷவென்றும், யோஷித்த ராஜபக்ஷ இரண்டாவது குற்றவாளியே எனவும் குறித்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இக்கொலையில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆறு பேர் பாவித்த டயலொக் தொலைபேசி அலைவரிசைக்கான சிம்கார்ட் பதிவுகள் அழிக்கப்பட்டிருப்பதும் ஊர்ஜிதமாகியுள்ளதாக குறித்த இணையத்தளம் சுட்டிக் காட்டியுள்ளது.
தாஜுதீன் கடத்தப்பட்ட தினத்தில் இருந்து இரு வாரங்களுக்கு உட்பட்ட காலத்தின் சிம்கார்ட் பதிவுகளே அழிக்கப்பட்டிருப்பதாகவும், டயலொக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹான்ஸ் விஜேசூரியவே இதற்கு உடந்தையாக இருந்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக குறித்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹான்ஸ் விஜேசூரிய எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படும் சாத்தியப்பாடு உள்ளதாகவும் குறித்த இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
2010 ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை இலக்கு வைத்து ஹான்ஸ் விஜேசூரிய 1200 டயலொக் இணைப்புக்களுடனான கைத்தொலைபேசிகளை அவருக்கு இலவசமாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தாஜுதீன் படுகொலையில் மறைமுகமாக சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவும் கைது செய்யப்படுவதே நியாயம் எனவும் குறித்த இணையத்தளம் கோடிட்டுக் காட்டியுள்ளது.

