ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தோல்வியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பிரதமராக நியமித்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் பதவிகள் கிடைக்காத காரணத்தினால் அதிருப்தியடைந்துள்ள இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் தலைவர் ஒருவருக்கு ஆதரவான சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பாக தற்போது இரகசியமான முறையில் கலந்துரையாடி வருவதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் ராஜபக்சவினர் இருப்பதாக காட்டும் முனைப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
இந்த சதித்திட்டத்தின் முதல் கட்டமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான திலக் மாரப்பனவை பதவி விலக செய்த திட்டம் வெற்றியளித்துள்ளதை அடுத்து,
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான விஜயதாச ராஜபக்ச மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரை பதவி விலக செய்யும் சூழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான அரசியல்வாதி ஒருவரின் வாராந்த பத்திரிகையில் வஜிர, மாரப்பன, விஜயதாச வேண்டாம் – ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு என்ற தலைப்பில் புனையப்பட்ட செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவிற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறி, ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட்ட மைத்திரி ஆதரவாளர்களையே அந்த செய்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் என்ற வகையில், புதிய தேவைத்திட்டத்தின் கீழ் செயற்பட மக்கள் ஆணையை பெற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற பலத்தை பலமிழக்க செய்ய இந்த குழுவினர் பல சதித்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பகிரங்கமாக விமர்சித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் மீது மக்கள் வெறுப்படையும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.