பொலன்னறுவை, கதுருவெல நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஐந்து கடைகள் சேதமடைந்துள்ளதுடன், 42 வயதுடைய முனாஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.
கதுருவெல நகரில் உள்ள செரமியல் சந்தியில் அமைந்துள்ள கடையொன்றில் இன்று நண்பகல் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது தீயை அணைக்கப் போராடிய கடை ஊழியர் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையே குறித்த கடையை அண்மித்திருந்த ஹோட்டல், ஹார்ட்வெயார், கண்ணாடிப் பொருட்கள் விற்பனைக் கடை உள்ளிட்ட ஐந்து வர்த்தக நிலையங்களுக்கும் தீ பரவியது.
பொலன்னறுவை பொலிசார் ஸ்தலத்துக்கு வந்து பார்வையிட்ட பின்னர், தமன்கடுவை பிரதேச சபையின் தீயணைப்புக்கருவிகளைத் தருவித்து, தீயை அணைக்க நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும் தீ பரவிய கடைகளில் கடும் சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தீ விபத்துக்கான காரணம் மின்சாரக் கசிவாக இருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ள போதிலும், இதுவரை அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
