கூட்டுறவு மொத்த வர்த்தக கூட்டுத்தாபனத்தில் (சதொச) ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்கு முறையற்ற விதத்தில் அழுத்தங்களை கொடுக்கும் உயர் அதிகாரிகள் 6 பேரை உடனடியாக பணிநீக்கம் செய்யுமாறு பாரிய ஊழல் மற்றும் மோசடி விசாரணை தொடர்பான ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
பாரிய ஊழல் மற்றும் மோசடி விசாரணை தொடர்பான இந்த ஆணைக்குழு தொழில் மற்றும் வணிக அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு மொத்த வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மேலதிக செயலாளர் (சந்தை) ஜீ.ஜீவானந்த, பிரதி பொதுமுகாமையாளர் (நிதி) ஆசிரி பெர்ணான்டோ, பிரதி பொது முகாமையாளர் (கொள்வனவு) அஞ்ஜன நிஷங்க, சிரேஷ்ட முகாமையாளர் ஜயவீர பண்டார, பிரதான பொறியியலாளர் கே.ஆரியவங்ச மற்றும் சட்ட ஆலோசகர் (கொள்வனவு) வைஜயந்தி மாலா விஜேதிலக்க ஆகியோரையே பதவி விலக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டுறவு மொத்த வர்த்தக கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் குறித்த அதிகாரிகளின் கீழ் கடமையாற்றிய ஊழியர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விசாரணை அறிக்கையை பெற்றுக் கொள்ளும் போது தேவையற்ற தாமதம் நிலவுவதாகவும், செயற்பாடற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆணைக்குழுவிற்கு தகவல்கள் கிடைத்தமையினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
