கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்குத் தெரியாமல் 6 அத்தியாவசியப் பொருட்களின் அதிக பட்ச சில்லறை விற்பனை விலை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டமையைக் காரணம் காட்டி அதிகார சபையின் தலைவர் கலாநிதி ஆர்.கே.எம்.ரத்நாயக்க இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருட்கள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நேற்று விடுக்கப்பட்டிருந்தது. அதிகார சபையின் தலைவரின் இராஜினாமா தீர்மானத்தினால், வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் சட்டப்படி செயற்படுத்தப்படுவதற்கு, அதில் நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவரின் கையொப்பம் இருத்தல் வேண்டும். இருப்பினும், வெளியாகியுள்ள வர்த்தமானி அறிவித்தல் அதிகார சபையின் தலைவரின் அனுமதியின்றியே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
