அதிக சப்தம் வெளிப்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்த கூட்டு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை இன்று முதல் முன்னெடுக்கவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சூழல் மாசடைவதனைத் தடுத்தல், மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்களைக் குறைத்தல் போன்றன இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.
கொழும்பு செபெஸ்டியன் மாவத்தையிலும் குணசிங்கபுர பஸ் தரிப்பு நிலையத்திலும் இன்று காலை இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் “வாகனங்களின் ஹோர்ன்” சப்தம் வெளிப்படுத்துவதற்கான வரையறைகள் தனித்தனியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்ட முரணான ஹோர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி தெரிவித்துள்ளார்.
