செய்தியாளர்- ஹாசிப் யாஸீன்-
மருதமுனை மோட்டு வட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீடுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடன் வழங்குவதற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுசித பீ.வணிகசிங்கவுக்கும், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோருக்கிடையேயான சந்திப்பு நேற்று (13) வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது பிரதி அமைச்சர், மிக நீண்ட காலமாக மருதமுனை மோட்டு வட்டை வீடுகள் உரிய மக்களுக்கு வழங்கப்படாமல் தாமதப்படுத்தியதனால் இவ்விடயம் பெரும் சர்ச்சையாக்கப்பட்டுள்ளதை அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டினார்.
மருதமுனையில் சுனாமி இவ்வீட்டுத்திட்ட விநியோகத்தின் போது பாதிக்கப்பட்ட மக்கள் விடுபட்டுள்ளனர். அவர்களையும் உள்வாங்கி இவ்வீடுகளை வழங்குவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபருக்கு பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.
