இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 63ஆவது தேசிய மாநாட்டுக்கு சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் 31/10/2015 சாய்ந்தமருதில் இளைஞர் மாநாட்டுக்கு சென்ற காரணத்தினால் அந்நிகழ்வுக்கு செல்ல முடியாது போனமையால் அங்கு அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்தி.
நான் எனது மாணவ பருவத்தில் இருந்தே ஜமாஅத்தே இஸ்லாமியி;ன் செயல்பாடுகளினால் பெரிதும் கவரப்பட்டேன்.
இலங்கை ஜமாஅதே இஸ்லாமின் வருடாந்த பொதுக்கூட்டத்திற்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
கடந்த நூற்றாண்டில் மாபெரும் இஸ்லாமிய சிந்தனையாளர்களில் ஒருவராக திகழ்ந்த மறைந்த மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களால் இந்திய உபகண்டத்தில் தோற்றுவிக்கப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கம் பாகிஸ்தான், பங்களதேஷ், இலங்கை ஆகிய நாடுகளில் மிகக் குறுகிய காலத்துக்குள் வியாபித்து, இஸ்லாமிய பிரசார பணியில் குறிப்பிடத்தக்க தடத்தை பதித்துள்ளது.
நான் எனது மாணவ பருவத்தில் இருந்தே ஜமாஅத்தே இஸ்லாமியி;ன் செயல்பாடுகளினால் பெரிதும் கவரப்பட்டேன். அதன் மாணவர் அமைப்பான ஜம்இய்யதுல் தலபத்துல் இஸ்லாமியாவும் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மிக நீண்ட காலமாக பிரபல்யம் அடைந்துள்ளது.
முழுமையான வாழ்க்கைத் திட்டமான இஸ்லாத்தை தனித்தனியாக கூறு போட்டு குறுகிய வட்டத்தினுள் சுருக்கி விடாமல், அதனை அனைத்துத் துறைகளிலும் அல்லாஹ்வினால் அருளப்பட்ட திருக்குர்ஆனினதும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களினது வழிமுறைகளினதும் அடிப்படையில் வாழ்க்கையில் பின்பற்றி ஒழுகுவதையே ஜமாஅதே இஸ்லாமி வலியுறுத்தி வருகின்றது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் அரசியலிலும் ஈடுபட்டு தேசிய மட்டங்களில் அளப்பரிய சேவையாற்றிவரும் ஜமாஅதே இஸ்லாமி அமைப்பு இலங்கையை பொறுத்தவரை அரசியல் தவிர்ந்த ஏனைய துறைகளில் முஸ்லிம் சமூகத்தை சிறப்பாக வழிநடாத்தி வருகின்றது. ஆனால், இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அரசியல் வழிகாட்டுதல்களையும் அவ்வப்போது வழங்கி வருகின்றது. நாடாளாவிய ரீதியில் அங்கத்தவர்களை கொண்டுள்ள இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பணிகளை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. ஆமின்
ரவூப் ஹக்கீம்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,
நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர்.