இக்பால் அலி-
கிழக்கு மாகாண சபையினால் பட்டதாரிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்ட சமூக சேவை உத்தியோகத்தர்- தரம் II மற்றும் மத்திய அரசாங்கத்தினால் விண்ணப்பம் கோரப்பட்ட இலங்கை பதிவாளர் சேவை தரம்-II ஆகிய பட்டதாரிகளுக்கான பரீட்சைகள் இம்மாதம் (ஓகஸ்ட்) 31ம் திகதி நடைபெறவுள்ளதாக விண்ணப்பதாரிகளுக்கு நேரசூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டு பரீட்சைகளுக்கும் தனித்தனியாக பணம் செலுத்தி பற்றுச்சீட்டினை பெற்றுக் கொண்ட பட்டதாரிகள் பலருக்கு இவ்வாறு ஒரே நேரத்தில் பரீட்சைக்கு நேரசூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த பட்டதாரி ஒருவருக்கு வந்த நேரசூசியே இதுவாகும்.
எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, இவ்விரு பரீட்சைகளையும் வெவ்வேறு தினங்களில் நடாத்துமாறு பரீட்சாத்திரி பட்டதாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஆக்குறைந்தது கிழக்கு மாகாண சபை இவ்விடயத்தைக் கவனத்தில் கொண்டு சமூகசேவை உத்தியோகத்தர் தரம் II இற்கான பரீட்சையை ஒரு நாளேனும் பிற்படுத்தி நடாத்துமாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு பிற்படுத்தத் தவறின் பாதிக்கப்படப்போகும் பட்டதாரிகள் நீதி மன்றம் செல்லவும் தயாராக இருப்பதாக மிகக் கவலையுடனும், மன உழைச்சலுடனும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மத்திய அரசின் பரீட்சை நேரசூசியை அறியாத கிழக்கு மாகாண சபை இது விடயத்தில் பொறுப்பற்றவிதத்தில் செயற்பட்டுள்ளது என்பதையும் பாதிக்கப்படப்போகும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
