சுபைதீன் ஆப்தீன் -
அரசாங்கத்தின் வரவுசெலவு அறிக்கைக்கு அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆலோசனைகள் முன்வைப்புஅரசாங்கம் 2016ம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தை தயாரிப்பதற்காகவேண்டி அதற்கான ஆலோசனைகளையும் கருத்திட்டங்களையும் பொதுமக்களிடமிருந்தும் சிவிலமைப்புக்களிடமிருந்தும் தொழி ல் சங்கங்களிடமிருந்தும் எதிர்பார்த்துள்ள இவ்வேளையில், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் சில முன்னாலோசனைகளையும் கருத்துக்களையும் அச்சங்கத்தின் சார்பாக தலைவர் ஜனாப். கே.எம்.கபீர் நிதியமைச்சிற்கு சமர்ப்பித்துள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் ஜனாப். எஸ்.ஆப்தீன் அவர்கள் தெரிவித்தார்.
கடந்த 2015.10.11ம் திகதி பிற்பகல் 04.30 மணியளவில் கல்முனையில் நடைபெற்ற சங்கத்தின் ஆளுனர் சபைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக ஆழமான கருத்தாடல்கள் இடம்பெற்று எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பின்வரும் அம்சங்கள் அடங்கிய ஆவணமானது நிதியமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
1. இதுவரைக்கும் அம்பாறையில் உள்ள கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாமலுள்ள மோட்டார் சைக்கிளை துரிதமாக வழங்க நிதியை ஒதுக்கீடு செய்தல்.
2. பட்டதாரி நியமனத்தின் பயிற்சிக்காலமாக 06 மாதங்கள் நிர்ணயிக்கப்பட்டும், மேலதிகமான பயிற்சிக்காலமாக நீடிக்கப்பட்ட 06 மாதங்களையும் சேவைக்காலத்துடன் இணைக்க நடவடிக்கை எடுத்தல்.
3. கள உத்தியோகத்தர்களினது கள விடயங்களை சிரமமில்லாது மேற்கொள்ள மடிக்கணினிகளையும் இன்டர்நெட் வசதிகளையும் வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்தல்.
4. கள உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டும், அதற்கான கள விஜயக் கொடுப்பனவு (ஊவுயு) இதுவரை வழங்கப்படாத கள உத்தியோகத்தர்களுக்கு அதற்கான ஒதுக்கீடுகளை வழங்கல்.
5. இதுவரைக்கும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் இணைப்புச் செய்யப்பட்டும், முறையான கடமைப்பட்டியல் வழங்கப்படாத அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அதனோடு தொடர்பான அமைச்சினூடாக வழங்க நடவடிக்கை எடுத்தல்.
6. இதுவரைக்கும் எந்த அமைச்சிலோ அல்லது திணைக்களங்களிலோ இணைப்புச் செய்யப்படாது, தற்போதும் பட்டதாரி பயிலுனராக செயற்படுகின்ற பட்டதாரிகளை வெற்றிடமுள்ள இடத்தில் முறையாக இணைப்புச்செய்ய உடனடி நடவடிக்கை எடுத்தல்.
7. மேலதிக கல்விசார் தகைமைகளையுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மேலதிகக் கொடுப்பனவு ஒன்றினை வழங்கள்.
8. அபிவிருத்தி உத்தியோகத்தர்களினது கொள்திறன் விருத்தியை மேம்படுத்த முறையான பேண்தகு நிகழ்சித் திட்டமொன்றினை வகுத்து அமுலாக்குதல்.
இவ்வாறான அம்சங்களடங்கிய ஆவணத்தில், தற்போதைய அரசாங்கமானது பல்வேறு நிதி ரீதியிலான நெருக்கடிகளை சந்தித்து வருவதனையும், அதனை தீர்ப்பதற்காக அது மேற்கொள்ளும் முயற்சிகளையும் சங்கம் ஆழமான கவனத்திற் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தயாரிக்கப்படவுள்ள வரவுசெலவு திட்டமானது எமது நாட்டினது மக்கள் நலனை மைய்யப்படுத்தியதாகவும், பேண்தகு அபிவிருத்தியை உள்ளடக்கியதாகவும், வீண்விரயங்களை இல்லாமல் செய்வதாகவும், ஏற்கனவேயுள்ள நாட்டிற்கான கடன் பழுவினை தீர்க்கும் விதத்திலும் அமைய வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
