தாய்க்கு திருமணம் செய்து வைத்து கண்ணை மூடிய மகன் - கண்ணீரோடு சொல்கிறார் அம்மா

னது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி சிந்திக்காமல் தாய்க்கு வாழ்க்கைத் துணை தேடிவைத்து, மகிழ்ந்த இளைஞர்கள் எங்கேயோ யாரோ ஒருசிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவர், உண்ணி என்ற அனந்த கிருஷ்ணன். அவரது தாயார் ஸ்ரீதேவி.

தாயாருக்காக அனந்த கிருஷ்ணன் தேடிப்பிடித்த இரண்டாவது தந்தை சசிதரன். இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள்.

இது குறித்து ஸ்ரீதேவி கூறியதாவது,

‘‘சாதாரண அம்மா– மகன் உறவுபோல் எங்கள் அன்பு இருக்கவில்லை. அவன் என் மீது உயிரையே வைத்திருந்தான்.

அவனுக்கு பத்து வயதானபோது அவனது தந்தை அஜித்குமார் மாரடைப்பில் காலமானார். அதன் பின்பு தனியாளாக என் மகனை வளர்த்து ஆளாக்கினேன்.

கணவரை இழந்து ஒரு வருடமானதும் குடும்பத்தினர் என்னை மறுமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினார்கள்.

அப்போது உண்ணி என்னிடம், ‘அம்மா நீ இன்னொரு திருமணம் செய்துகொண்டால், அந்த ஆளை நான் கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போய்விடுவேன். அம்மா இனி கல்யாணம் செய்துகொள்ள வேண்டாம். நமது வீட்டில் நாம் இருவர் மட்டும் போதும்’ என்றான்.

அன்றே நான், எனக்கு அவனும் – அவனுக்கு நானும் போதும் என்று முடிவு செய்துவிட்டேன். நான் மருத்துவ பிரதி நிதியாக வேலைபார்க்கிறேன்.

ஆலப்புழை மாவட்டம் முழுவதும் சுற்றிக்கொண்டே இருக்கவேண்டும். கடுமையான வேலை. மகனை நல்லபடியாக வளர்க்கவேண்டும் என்பதற்காக அந்த வேலையை செய்தேன்.

என் மகன் இளைஞன் ஆனதும் அவனது நண்பர்களோடு அடிக்கடி சுற்றுலா செல்வான். அதனால் வீட்டில் நான் தனிமையை உணர்ந்தேன். சில நேரங்களில் நான் அவனிடம், ‘அம்மாவை தனியாக விட்டுவிட்டு சென்றுவிடாதே’என்பேன்.

அப்போதெல்லாம் அவன், ‘அம்மா நான் தூரத்தில் படிக்கச் செல்லவேண்டியதிருக்கும். அதனால் நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு துணை அவசியம்’ என்பான்.

பின்பு ஒருநாள் அவனது நண்பனின் தந்தையிடம் போய், ‘என் அம்மாவிற்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகிறேன்.

உங்கள் ஆலோசனையை கூறுங்கள்’ என்று கேட்டிருக்கிறான். அவர், ‘நீ அதை செய்தால் அது மிக நல்ல காரியமாக இருக்கும்’ என்று பதில் கூறியிருக்கிறார்.

உடனே என் மகன் வேகமாக காரியத்தில் இறங்கி விட்டான். பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தான். சசிதரன் நாயர் என்பவர் எங்களை அணுகினார்.

அவர் ஏற்கனவே மனைவியை இழந்தவர். என் மகன் அவரை சந்தித்து பேசினான். அவனுக்கு பிடித்தது. குருவாயூர் கோவிலில் எங்கள் திருமணம் நடந்தது. திருமணத்தில் இறந்து போன அவனது தந்தையின் குடும்பத்தினரும் கலந்து கொண்டார்கள்.

அவன்தான் பொறுப்புடன் திருமணத்தை நடத்தினான். என் மகன் மிக மகிழ்ச்சியாக இருந்த நாள் அது. என்று ஸ்ரீதேவி சொல்லும்போது அவர் தன்னை அறியாமல் அழுது விடுகிறார்.

தாயாகிய தனக்கு மறுமணம் செய்துவைத்த அந்த அன்பு மகன், மணம் முடிந்த நான்கே மாதங்களில் தனது 19–வது வயதில் விபத்தில் சிக்கி மரணமடைந்து விட்டார்.

தாய்க்கு துணையை தேடிக்கொடுத்த மகிழ்ச்சியில் அவர் விடை பெற்று விட்டார். பைக் விபத்தில் பலியாகி இருக்கிறார்.

‘‘அன்று அவன் ஆசைப்பட்டு வாங்கிய பைக்கில் பயணம் சென்றான். முதலில் எனக்கு, பைக் வாங்கிக்கொடுக்க விருப்பம் இல்லை. ஆனால் இன்டர்நெட்டை பார்த்து 2 லட்சம் ரூபாய் விலை கொண்ட பைக்கை வாங்கித்தர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான். நானும் வேறு வழியில்லாமல் வாங்கிக் கொடுத்தேன்.

அவன் பைக்கில் சென்ற பின்பு அவனது நண்பனின் தந்தை எனக்கு போன் செய்து, ‘பைக் விபத்தில் அவனது கை முறிந்துவிட்டது’ என்றார். நான் ரொம்ப கவலைப்படவில்லை.

ஏன் என்றால் கை ஒடிந்தால் என்னோடு சில மாதங்கள் வீட்டில் இருப்பான் அல்லவா என்று நினைத்துக்கொண்டு, அவன் சேர்க்கப்பட்டிருந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றேன்.

பலத்த காயத்தோடு நினைவிழந்து கிடந்தான். வாயில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

நண்பர்களோடு பீச்சில் படம் எடுத்துவிட்டு, பைக்கில் அவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே ஒரு நாய் ஓடியிருக்கிறது.

கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்தில் பைக் மோதியுள்ளது. என் மகன் ஹெல்மெட் அணிந்திருந்தும், கழுத்தில் பலத்த முறிவு ஏற்பட்டிருக்கிறது” சோகத்தில் விம்முகிறார், ஸ்ரீதேவி.

வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், பல டாக்டர்கள் கவனித்தும் பலனில்லை. இறுதியில் டாக்டர்கள் குழு ஒன்று கூடி, ‘மூளைச்சாவு அடைந்து விட்டதாக’ அறிவித்திருக்கிறது.

‘‘அன்பு மகனை இழந்த சோகத்தில் நான் அழுது அரற்றிக் கொண்டிருந்தபோது உடல் உறுப்பு தான அமைப்பை சேர்ந்த பெண் ஒருவர் என்னை சந்தித்தார்.

சில வருடங்களுக்கு முன்பே என் மகன் விரும்பி உடல் உறுப்புகளை தானம் செய்வதற்காக பதிவு செய்திருந்தான். அவன் விருப்பப்படி நானும் பதிவு செய்திருந்தேன்.

அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோசப் என்ற 60 வயது நோயாளிக்கு என் மகனின் ஈரலும், ஒரு கிட்னியும் ஆபரேஷன் மூலம் பொருத்தப்பட்டது.

இன்னொரு கிட்னியை வேறு ஒரு நோயாளிக்கு பொருத்தினார்கள். கண்களையும் தானம் செய்தேன். என் மகன் இறக்கவில்லை. வாழ்ந்துகொண்டிருக்கிறான்’’ கண்ணீரோடு சொல்கிறார், அம்மா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -