இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சிங் என்ற வாலிபரும் இங்கு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்ற ராம்சிங் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதனால் அவரை அவரது மனைவி ராஜி தொழிற்சாலைக்குச் தேடிச் சென்றார். அங்கு விசாரித்த போது அவருக்கு யாரும் சரியான பதில் கூறவில்லை. இதனால் மனம் வேதனையுடன் ராஜி காணப்பட்டார்.
இந்த நிலையில் அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் சில தொழிலாளர்களின் செல்போன்களில் ஒரு வீடியோ பரவியது. அதில் தொழிலாளி ராம்சிங்கை கயிற்றால் கட்டி தொங்க விட்டு சிலர் அடித்து கொலை செய்யும் திடுக்கிடும் காட்சி பதிவாகி இருந்தது.
இதனால் தொழிலாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த வீடியோவை ராஜியும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார். மேலும் இது பற்றி அவர் பொலிசிலும் புகார் தெரிவித்தார்.
பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது அந்த வீடியோ ராம்சிங் பணிபுரியும் தொழிற்சாலையில் சகதொழிலாளி ஒருவரால் இரகசியமாக செல்போனில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது ராம்சிங்குக்கு அந்த தொழிற்சாலை முதலாளி சம்பளம் கொடுக்காதது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
சம்பவத்தன்று சம்பளத்தை கேட்கச் சென்ற ராம்சிங்கை தொழிற்சாலையில் கட்டி தொங்க விட்டு அடித்து கொன்று உள்ளனர். இதில் அந்த தொழிற்சாலை உரிமையாளரின் தூண்டுதல் இருந்ததும் தெரிய வந்தது.
இது பற்றி பொலிசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகி உள்ள அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் உட்பட சிலரை தேடி வருகிறார்கள்.
