எம்.எம்.ஜபீர்-
சவளக்கடை பிரதேசத்தில் அமைந்துள்ள நெற்களஞ்சியசாலையில் மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்ட தீவிபத்து சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக தடுத்து நிறுத்த முடிந்ததாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதானது, இன்று அதிகாலை 3.00 மணியளவில் திடீரென நெற்களஞ்சியசாலையினுள் இருந்த சுவிஜ் (Switch) தீப்பற்றி எரிந்து கொண்டு வெளியிலுள்ள சுவிஜ்ஜிற்கு தாவிய போது நெல் விற்பனைக்காக களஞ்சியத்திற்கு அருகில் காத்திருந்த விவசாயிகள் கூக்குரலிட்டு உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலங்கை மின்சார சபைக்கு விடயத்தைகூறி மின்சாரத்தை துண்டித்ததுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து பாரியளவில் தீபரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். இதனால் களஞ்சியசாலைக்கும், அதிலிருந்த நெல் மூடைகளுக்கும் எதுவித சேதமும் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கடமையிலிருந்த அதிகாரிகளிடம் மேற்கொண்ட போது மின்சார ஒழுக்கு காரணமாகவே தீவிபத்து ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம் தெரிவித்தார்.


