க.கிஷாந்தன்-
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பசறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஒருவரைத் தாக்கியதாக ஊவா மாகாண முதலமைச்சர் மீது அண்மையில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து 23.09.2015 அன்று பதுளை நகரில் பெருந்தொகையான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். முதலமைச்சருக்கு எதிராக இவர்கள் கடுமையான கண்டனங்களையும் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
ஊவா மாகாண சபையின் பிரதான செயலகம் முன்னால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக முதலமைச்சர் அலுவலக செயற்பாடுகள் பல மணி நேரம் முடங்கியிருந்தன. அதன் பின் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.