தன் புதல்வன் யோஷித காப்பாற்றப்படுவார் என்று மஹிந்த ராஜபக்ச உருக்கமாக தெரிவித்துள்ளார். முன்னாள் ரக்பி வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை தொடர்பாக மஹிந்த ராஜபக்சவுடன் அவரது நெருங்கிய சகாக்கள் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது தான் செய்த நற்செயல்களின் புண்ணித்தால் தனது புதல்வர்களுக்கு எந்த ஆபத்தும் நேராது என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் புதல்வி துலாஞ்சலி ஜெயக்கொடி சில வருடங்களுக்கு முன்னர் பெருந்தொகையான போலி பணநோட்டுகளை வங்கியில் வைப்பிலிட முயன்ற போது பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலையிட்டு துலாஞ்சலியைக் காப்பாற்றி இருந்தார். குறித்த சம்பவத்தை ஞாபகப்படுத்தியுள்ள மஹிந்த ராஜபக்ச, அதே போன்று தன் மகனும் காப்பாற்றப்படுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அந்தச் சம்பவம் நடந்த போது நான் முக்கியமான ஒரு கலந்துரையாடலில் இருந்தேன். ஹேமா பிரேமதாசவும், சஜித்தும் பல தடவைகள் எனக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தனர். இது குறித்து லலித் வீரதுங்க எனக்கு சிறிய குறிப்பொன்றை அனுப்பியிருந்தார். அதை வாசித்து விட்டு உடனே கலந்துரையாடலில் இருந்து வெளியே வந்த நான் தொலைபேசியை எடுத்து பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டேன். எனினும் அவரோ என்னை அந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்றும் ஊடகங்கள் வரை விவகாரம் கசிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபரின் அம்மாவை ஞாபகப்படுத்தி நான் கெட்டவார்த்தையால் திட்டி, துலாஞ்சலியிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுவிட்டு அவரை உடனடியாக விடுதலை செய்யச் சொன்னேன். நான் ஒரு பத்து நிமிடம் தாமதித்திருந்தால் அன்றைக்கு துலாஞ்சலி நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகள் என்ற ஒரே காரணத்துக்காகவே அன்றைக்கு நான் துலாஞ்சலியைக் காப்பாற்றினேன். அதுகுறித்து ஹேமாவும், சஜித்தும் எனக்குப் பல தடவைகள் தொலைபேசி வழியாக நன்றி தெரிவித்தார்கள். எஸ்.எம்.எஸ்.உம் அனுப்பினார்கள்.
தற்போது எனது புதல்வர்கள் தொடர்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் எனது புதல்வர்கள் கொலைகளில் தொடர்புபட்டிருக்கவில்லை. எனவே நான் செய்த புண்ணியங்களின் பலனாக கடவுள் என் பிள்ளைகளைக் காப்பாற்றுவார் என்றும் மஹிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
