கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முப்படையினருக்கு உணவு பொருட்களை விநியோகிக்கும் ஒப்பந்தம் சம்பந்தமாக தான் வெளியிட்ட முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தாது, இராணுவத் தளபதி தனக்கு அந்த தகவல்களை நபர்கள் யார் என்பதை தேடி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் ஊடகவியலாளர் என்ற வகையிலும் தனக்கு தகவல் கிடைத்த மூலத்தை வெளியிடப் போவதில்லை. இதற்கு எதிராக எப்படியான சட்ட நடவடிக்கைக்கும் செல்ல முடியும். என் மீது இடி விழுந்தாலும் எங்கிருந்து தகவல் கிடைத்தது என்பதை வெளியிட போவதில்லை எனவும் புத்திக பத்திரண குறிப்பிட்டுள்ளார்.
முப்படையினருக்கு உணவு பொருட்களை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கடந்த பொதுத் தேர்தல் சமயத்தில் வெளியிட்ட தகவல்கள் குறித்து வாக்குமூலம் பெற குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமை குறித்து தெளிவுப்படுத்துவதற்காக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பத்திரண இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கு தகவல் வழங்கிய நபர்களை விட முறைகேடுடன் தொடர்புடைய இராணுவ மேஜர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு விசாரணை நடத்தாது, இராணுவ தளபதி திருடர்களை பாதுகாக்க தயாராகி வருகிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இராணுவ மேஜர், இராணுவத் தளபதி ஒருவரால் கூட நிர்மாணித்து கொள்ள முடியாத அளவிலான வீடு ஒன்றை நிர்மாணித்துள்ளார். திருடர்களை பாதுகாக்காது, இராணுவத்தளதி சம்பந்தப்பட்ட மேஜர் பற்றி விசாரணை நடத்த வேண்டும். அத்துடன் நான் இந்த சம்பவம் தொடர்பான விடயத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வேன்.
கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் இந்த விடயம் குறித்து குழப்பமடையாமல் இருக்கும் நிலையில், இராணுவ தளபதி மாத்திரம் குழம்பி போயுள்ளதாகவும் புத்திக பத்திரன மேலும் தெரிவித்துள்ளார்.
