பி.எம்.எம்.ஏ.காதர்-
ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர்களையும், உடமைகளையும், வாழ்விடங்களையும் இழந்து இன்று வரை துயரில் தோய்ந்து வாடும் மக்களுக்கு இந்த நல்லாட்சியிலாவது நுரைச் சோலை வீட்டுத் திட்டம் பகிர்ந்தளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் நாநூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள்; காத்திருக்கின்றன.
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தம் நடைபெற்று பதினொரு வருடங்கள் நிறைவடையும்(26-12-2015)நிலையில் இன்றுவரை வாழ்விடம் இல்லாம் கொட்டில்களிலும், கூடாரங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் பல்வேறுபட்ட துன்பங்களுடன் வாழும் மக்களுக்கு நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழும் நாள் எப்போது ?.
ஆழிப்பேரலையில் அழிந்த சொத்துக்களை மீளத் தேடிக்கொள்ள முடியும் ஆனால் இழந்த உறவுகளை இனிமேல் வாழ்க்கையில் ஒரு போதும் நாம் சந்திக்கவே முடியாது. இவ்வாரான பிரிவுகள் மனச் சஞ்;சலத்தையும் உளரீதியான பாதிப்புக்களையும் தொடர் கதையாகவே கொண்டிருக்கும்.
இவ்வாறான மனநிலையுடன் பதினொரு வருடங்கள் கடந்தும் வாழ்கின்ற பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் உரிய மக்களுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற ஒரு வீட்டுத் திட்டம் நுரைச் சோலை விட்டுத் திட்டமாகும் இன்று இந்த வீட்டுத்திட்டம் சோலைக் காடாக மாறிவிட்டது.
ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தை அண்டிய பதுர்நகர் பிரதேசத்தைச் சேர்ந்த நானூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்காகவே இந்த வீட்டுத் திட்டம் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிவுக்குட்ட நுரைச் சோலை என்ற பிரதேசத்திலே இந்த வீட்டுத்திட்டம் நிர்மானிக்கப்பட்;டுள்ளது.
சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அப்போது அமைச்சராக இருந்த பேரியல் அஷ்ரப் அவர்கள் உம்றா கடமைக்குச் சென்ற வேளை சவூதி மன்னர் ஹூசைன் அவர்களை சந்தித்த போது ஆழிப் பேரலை பற்றிய வீடியோவை காண்பித்தார்.
அதன் பயானாகவே இந்த வீட்டுத்திட்டம் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் பயனாக 2006ம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி 'அல்-ஹூசைன் மாதிரிக் கிராமம்' என்ற பெயரிலான நுரைச் சோலை வீட்டுத்திட்ட நிர்மானத்திற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சின் கிழ் கொண்டு வரப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த வீட்டுத் திட்டத்தை நிர்மானிப்பதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் 150 கோடி ரூபாவை ஒதுக்கியிருந்தது. இந்த நிதியின் மூலம் 500 வீடுகளும், பள்ளிவாசல், வைத்தியசாலை, ஆண்களும், பெண்களும் வெவ்வேறாக் கற்பதற்கு தனித் தனியாக இரண்டு பாடசாலைகள் சனசமூக நிலையம். நூலகம் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்டதாக இந்த வீட்டுத்திட்டம் உருவாக்கப்பட்டது.
ஓவ்வொரு வீடும் சுமார் 15 இலட்சம் பெறுமதியுடையதாகும். இங்கு மின்சார வசதி, நீர்வசதி, விளையாட்டு மைதானம் வசதி என்பன ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. 2010ம் ஆண்டு இவ் வீட்டுத்திட்டப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. இருந்த போதிலும் பலவேறு பட்ட பிரச்சினைகளைக் காரணம் காட்டி இவ் வீட்டத்திட்டத்தை மக்களிடம் கையளிப்பதில் பெரும் சிக்கல்கள் எழுந்தன.
அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்குள் ஏற்பட்ட புரிந்துணர்வின்மை காரணமாகவும், முரண்பாடுகளாலும் போட்டி பொறாமை காரணமாகவும், இந்த வீட்டுத் திட்டப் பிரச்சினையில் பேரினவாதிகள் தலையிடும் அளவுக்கு பூதாகரமாகியது.
முஸ்லிம் அரசியல் தலைமைகளின் ஒற்றமையின்மை காரணமாக பேரின வாதிகளின் கை ஒங்கியது இதனால் இவ் வீட்டுத்திட்டம் தொடர்பாக ஜாதிக ஹெல உருமைய உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தது இதனால் இவ் வீட்டுத் திட்டத்தை உரிய நேரத்தில் மக்களுக்கு வழங்க முடியாமல் போனது துரதிஷ்டமாகும். இதனால் இன்று இந்த வீட்டுத்திட்டத்தின் வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டு காடு வளர்ந்து காணப்படுகின்றது.
ஜனாயக அடிப்டையில் இவ் வீடுகள் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கே வழங்கியிருக்க வேண்டும் ஆனால் ஜாதிகக் ஹெல உருமைய தாக்கள் செய்த வழக்கின் அடிப்படையில் 2009ம் ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் படி இவ் வீட்டுத் திட்ட வீடுகளை தனி இனமொன்றைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கக் கூடாது என்றும், அனைத்து இனத்தவர்களையும் உள்ளடக்கி இந்த வீடுகள் நீதியாக பகிர்ந்தளிக்குமாறும் அந்தத் தீர்ப்பிலே தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான நீதிபதிகள் குழு இந்தத் தீர்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் நாடு ஒன்று பணத்தை அன்பளிப்பாக வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கிய இந்த வீட்டுத் திட்டம் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் உடன் படாத போக்கும் குரோத மனப்பான்மையும் மக்களையே பாதிப்டையச் செய்திருக்கின்றது.
தேர்தல் வருகின்ற போதெல்லாம் மக்களின் காலடிக்குச் சென்று வாக்குப் பிச்சை கேட்கின்ற அரசியல் வாதிகள் தேர்தல் முடிந்ததும் மக்களை மறந்து கொழும்புக்குப் போய் உறைந்து விடுகின்றனர் வாக்களித்த மக்களைச் சந்திப்பதாக இருந்தால் அவர்களுக்கு மாலைகளும், மரியாதைகளும், பேன்ட வாத்தியங்களும், பொன்னாடைகளும் வேண்டும் இதுதான் இன்றைய முஸ்லிம் அரசியல் வாதிகளின் நிலை என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் பல முறை ஆர்ப்பாட்டங்களை நடாத்திய போதும் எந்த விதமான பயனும் கிடைக்கவில்லை. இறுதியாக 2012.12.26ம் திகதி பாதிக்கப்ட்ட மக்கள் ஒன்றிணைந்து அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக பிரதான வீதியை மறித்து தங்கள் வேதனைகளை வெளிக்காட்டி ஆர்ப்பாட்மொன்றை நடாத்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தவதற்கு பிரதேச செயலாளரும், பொலிசாரும் முயன்ற போதிலும் முடியாமல் போனது அதன் பின்னர் அப்போது அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக அப்போது இருந்த அஜித் ரோகன ஸ்தலத்திற்கு வந்து மூன்று வாரங்களுக்குள் வீடு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எழுத்து மூலமான கடிதம் வழங்கிய பின் மக்கள் கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டம் நடந்து சுமார் மூன்று வருடங்கள் கடந்த நிலையில் இந்தப் பிரச்சினையை மீட்டிப்பார்க்க வேண்டியிருந்தது.
இதன் காரணமாக இந்த வீட்டுத் திட்டத்தின் இன்றைய கள நிலவரம் தொடர்பாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.ஏ.லத்திப் அவர்களுடன் நேற்று(31-08-2015) தொலை பேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன்.
அவர் இப்படிச் சொன்னார் நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த வீட்டுத் திட்டம் சமாதானக் கிராமம் என்ற பெயரில் முஸ்லிம் சிங்கள, தமிழ் சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்களை குடியமர்த்த 2008-4 சுற்றறிக்கைக்கு அமைவாக காணிக் கச்சேரி நடாத்தி உரியவர்களை தெரிவு செய்வதற்கு மாவட்டச் செயலாளர் துசித்த பி வனிகசிங்க அவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 308 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு இரண்டரை இலட்சம் ரூபா நஷ்ட ஈட்டுக்கொடுப்பனவில் முதலாம் கட்டக் கொடுப்பனவு வழங்கப்பட்டள்ளது. விரைவில் இந்த வீட்டுத் திட்டம் காணிக்கச்சேரி மூலம் தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இருந்த போதிலும் இந்த வீட்டுத் திட்டம் தொடர்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடிய அக்கறை செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வீடுகளை விரைவாகக் கையளிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.
இன்றைய நல்லாட்சி அரசில் மக்களுக்கு நல்லது நடந்தால் நல்லதே என்ற கருத்துடன் இக்கட்டுரை நிறைவுறுகிறது.







