க.கிஷாந்தன்-
கடந்த காலங்களில் பாராளுமன்ற பதவிகளுடன் இருந்த மலையக அரசியல் தலைவர்கள் தங்களுடைய சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தார்களே தவிர மலையக மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை இணங்கண்டு தீர்த்து கொடுக்கவில்லை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அமைச்சராக தமது கடமைகளை பொறுப்பெடுத்துக் கொண்ட அமைச்சர் பி.திகாம்பரத்தை தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் வரவேற்கும் நிகழ்வொன்று 15.09.2015 அன்று அட்டன் டி கே. டப்ளியூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவர் மேலும் இங்கு தெரிவிக்கையில்,
மலையக மக்கள் எனக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை தீர்த்து வைக்க என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வைத்ததன் காரணமாக இவர்கள் எனக்கு அதிகபடியான வாக்குகளை வழங்கியுள்ளனர்.
மலையக மக்களின் ஆலோசனைகளை கேட்டு நான் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளேன்.
தற்போது எனக்கு கிடைத்த அமைச்சு பதவியை வைத்து மக்களுக்கு செய்ய வேண்டிய அபிவிருத்தி வேலைகளை தொழிற்சங்க பேதமின்றி முன்னெடுப்பேன்.
அத்தோடு 5 வருட காலங்களில் மலையக மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள், குடிநீர், சுகாதாரம் போன்ற பல பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன். அத்தோடு மலையகத்தில் குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உலக வங்கி 14 மில்லியன் நிதி உதவி செய்யவுள்ளது. மலையகத்தில் எல்லா பிரதேசங்களிலும் உள்ள மக்களுக்கு சிறந்த முறையில் வேலைத்திட்டங்களை நான் முன்னெடுப்பேன். 100 நாள் வேலைத்திட்டத்தினூடாக கட்டப்பட்ட 400 வீடுகள் எதிர்வரும் காலங்களில் திறந்து வைக்கப்படும்.
மலையகத்தில் இனி அராஜக ஆட்சி நடக்காது. கடந்த காலங்களில் மலையக மக்களை மரியாதை குறைவாக பேசியவர்கள் போல் நான் பேச மட்டேன். நான் மக்களை மரியாதையுடன் நடத்துவேன். மலையகத்தில் இனி அரசியல் ரீதியாக பழி வாங்குதல் நடக்காது.
மலையகத்தில் தனிவீடு திட்டம், பல்கலைகழகம் உருவாக்குதல், மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல், தொழில் பேட்டை அமைத்தல் மற்றும் அபிவிருத்தி திட்டங்களை துரித படுத்துவதாக தெரிவித்தார்.