கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாண சபையின் முதலமைச்சர்கள் தேர்தலில் வெற்றிபெற்று தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளளனர்.
இவற்றில் வடமேல் மாகாண சபை மற்றும் மேல்மாகாண சபைகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் மேல் மாகாண சபை முதலமைச்சர் பதவிக்கு கொழும்பு மற்றும் களுத்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும், வடமேல் மாகாண முதலமைச்சர் பதவிக்கு குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகளும் அடித்துக் கொள்ளத் தலைப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் இது தொடர்பாக கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஊவா மாகாண சபை முதலமைச்சர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசியல்வாதிகள் முட்டிமோதும் நிலையில் குறித்த விவகாரம் தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.
மாகாண முதலமைச்சர் பதவிக்கான இவ்வாறான போட்டிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பெரும் தலையிடியாக மாறிப்போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
