நாட்டின் தலைநகரான டெல்லியை அரியானா மாநிலத்தின் தொழில் நகரான பரிதாபாத்துடன் இணைக்கும் புதிய மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக இன்று காலை பரிதாபாத் நகருக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வருவதாகவும் அவரை அரியானா மாநில கவர்னர் கப்டன் சிங் சோலாங்கி, முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், மத்திய மந்திரிகள் கிருஷன் பால், பாபுல் சுப்ரியோ ஆகியோர் வரவேற்பதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அனைவருக்கும் வியப்பூட்டும் விதமாக இன்று காலை சுமார் பத்து மணியளவில் டெல்லியில் உள்ள ஜன்பத் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வந்த மோடி, அங்கிருந்து மெட்ரோ ரெயிலில் ஏறி பரிதாபாத் நகரை நோக்கி சென்றார்.
அவருடன் மத்திய மந்திரி வெங்கைய்யா நாயுடு, விரேந்திர சிங், ராவ் இந்திரஜித் சிங், டெல்லி மெட்ரோ ரெயில் சேவை குழுமத்தின் தலைவர் மங்கு சிங் ஆகியோரும் அதே ரெயிலில் பரிதாபாத்துக்குச் சென்றனர்.
பிரதமர் மோடி அமர்ந்திருந்த அதே பெட்டியில் உடன்வந்த பயணிகள் அவருடன் சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்தனர். அவர்களில் சிலர் பிரதமருடன் ‘செல்பி’ எடுத்தும் கொண்டனர்.

