பழுலுல்லாஹ் பர்ஹான்-
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பிள்ளைகளை உயிர் போல் காப்போம் எனும் தொனிப்பொருளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், ஸ்ரீலங்கா இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து நாடாளாவிய ரீதியில் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைய தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் நைறூஸின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள அந்நாஸர் வித்தியாலயத்தில் இருந்து காத்தான்குடி பிரதான வீதி ஊடாக சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் இன்று 30 புதன்கிழமை இடம்பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹி தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு ஊர்வலத்தில் காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், அந்நாஸர் வித்தியாலய அதிபர் அல்லாப்பிச்சை,பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.எம்.ஏ.நஜீப் ,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் சீ.சக்தி நாயகம், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி.நிஸாந்தி அருள் மொழி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட தகவல் நிலைய அதிகாரி ரீ.மகேந்திரராசா உட்பட காத்தான்குடி ,மட்டக்களப்பு ஆகிய பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், பொது இடங்களில் சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு ஸ்டிகர்களும் ஒட்டப்பட்டது.
மேற்படி விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தொடுகை மூலமும், தொடுகை அல்லாத முறையிலும் சிறுவர்களுக்கு பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் ஏற்படுகின்றது, சிறுவர்களை போதைப் பொருளின் பாவனையில் இருந்து உயிர்களை பாதுகாப்போம், சிறுவர்கள், இளைஞர்களுக்கு பாதுகாப்பான முன்மாதிரிப் பிரதேசமாக காத்தான்குடியை உருவாக்குவோம்,பாடசாலைகளில் இடைவிலகல்களை இல்லா தொழிப்போம், சிறுவர் துஷ்பிரயோகங்களைக் கண்டால் 1929க்கு அழைப்போம், சிறுவர் துஷ்பிரயோகங்களை ஒழிக்க அனைவரும் ஒன்றினைவோம் போன்ற பல்வேறு சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





