கடந்த இரண்டு வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் அக்கரைப்பற்று 5ம் கட்டையில் அமைந்திருக்கும் திண்மக் கழிவகற்றல் பிரிவினால் அப்பிரதேசம் பெரும் சூழல் மாசடைதலுக்கு உட்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
தேங்கிக்கிடக்கும் நீரினால் நுளம்பு பரவுவதுடன் அழுகிய நிலையில் இருக்கும் குப்பை கூழன்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர். மேலும் காற்றில் பறந்து சென்று வயல் நிலங்களுக்குள் விழும் பொலுத்தீன் பைகளினால் திண்மக் கழிவகற்றல் பிரிவைச் சூழவுள்ள வேளாண்மையும் பாதிக்கப்படுவதாகவும் வேளாண்மை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திண்மக் கழிவகற்றல் பிரிவின் சுற்றுப்புற வேலி தகர்ந்த நிலையில் காணப்படுவதால் விசர் நாய்களின் தொல்லையும் இங்கே அதிகமாகக் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பல தடவைகள் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் ஸக்கி அதாவுல்லாவுக்கும் மாநகர ஆணையாளருக்கும் அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பிரதேச மக்கள் மற்றும் வேளாண்மை செய்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அக்கரைப்பற்று மாநகரசபையாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் திண்மக் கழிவகற்றல் பிரிவு இயங்கு நிலையற்றிருப்பது கவலைக்குரிய விடயம். மேற்குறித்த திண்மக் கழிவகற்றல் பிரிவு ஏ.எல் தவம் அவர்கள் பிரதேச சபை தவிசாளராக இருந்த போது ஆரம்பித்து வைக்கப்பட்டு திறன்பட செயற்படுத்தப்பட்டு வந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
முகம்மது இஸ்மாயில் றிஸாட்,
அக்கரைப்பற்று.



