ஹாசிப் யாஸீன்-
கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தினால் தமிழ் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. கல்முனை மண்ணில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதனை சீர்குலைக்க இடமளிக்க முடியாது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை புதிய நகர அபிவிருத்தி சம்பந்தமாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான வீ.கலையரசன், எம்.இராஜேஸ்வரன், கல்முனை பிரதேச செயலாளர்களான எம்.எச்.எம்.கனி, எல்.லவநாதன், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உள்ளிட்ட கல்முனை மாநகர சபை தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், வட்ட விதாணைமார் என பலரும் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல. தமிழ் மக்களுக்குமான அபிவிருத்தி திட்டமாகும். இலங்கை காணி மீட்பு அதிகார சபை நகர அபிவிருத்தித் திட்டம் சம்பந்தமாக சாத்திய வள அறிக்கையினையே தயாரித்துள்ளது. இது முழுமைப்படுத்தப்பட்ட இறுதியான திட்ட வரைபு அல்ல.
இதற்கிடையில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தங்களிடம் கல்முனை புதிய நகர அபிவிருத்தி தொடர்பாக எவ்வித கருத்துக்களும், ஆலோசனைகளும் பெறப்பாடாமல் திட்ட வரைவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நகர அபிவிருத்தி திட்ட வரைபில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள் ஆகியோரின் கருத்துக்களும், ஆலோசனைகளும் பெறப்பட்ட பின்னரே இறுதி நகர அபிவிருத்தி திட்ட வரைபு முழுமைப்படுத்தப்படவுள்ளது. இதில் யாரும் சந்தேசக் கண்கொண்டு பார்க்கவேண்டியதில்லை.
இவ்விடயம் சம்பந்தமாக தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கும், நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம்முக்குமிடையே எதிர்வரும் காலங்களில் சந்திப்புக்களை ஏற்படுத்தி தெளிபடுத்தவுள்ளேன்.
நகரமயமாக்கல் அபிவிருத்தித் திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. இவ் அபிவிருத்தித் திட்டம் இன்று எமது நகரினை அபிவிருத்தி செய்ய வந்துள்ள நிலையில் நாம் எமக்குள்ள சந்தேகப் பார்வையினாலும், வெளிப்படைத் தன்மையின்மையினாலும் எமது எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்கவிருக்கும் புதிய நகரினை இழந்துவிட முடியாது.
இந்நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக தமிழர்களின் பெரும்பாலான காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாகவும், தமிழர் பிரதேசங்களில் முஸ்லிம்களை குடியேற்ற திட்டமிடப்படுவதாகவும் இத்திட்டம் பற்றி பிழையான கருத்துக்;களை இன்;று சிலர் தமிழ்; மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். இதில் எவ்வித உண்மையும் இல்லை.
தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து உருவாக்கிய நாட்டின் நல்லாட்சியில் தமிழ் மக்களுக்கோ, முஸ்லிம் மக்களுக்கோ அநீதி ஏற்பட்டுவிட மக்கள் பிரதிநிதிகளான நாம் இடமளிக்கமாட்டோம்.
கல்முனை புதிய நகர அபிவிருத்தியினை தமிழ்,முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வெளிப்படையாhக பேசி மேற்கொள்ள வேண்டும். இதனையே நான் விரும்புகின்றேன். இந்த நல்லாட்சியில் நல்லாட்சி நகரமாக கல்முனை புதிய நகரம் மிளிர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
