ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது பூரண நம்பிக்கை உண்டு என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும், பிரதமரும் நாட்டுக்கு பாதகமான எதனையும் செய்வார்கள் என நான் கருதவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அறிக்கையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
இராணுவத்தைச் சேர்ந்த எவரேனும் குற்றம் இழைத்திருந்தால் தண்டிக்க வேண்டும்.
எனினும் அதற்காக ஒட்டுமொத்த இராணுவத்தையும் தண்டிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகி வாக்கு மூலம் அளித்ததன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இன்று இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை வரலாற்றில் என்றும் தேர்தல் நடவடிக்கைகளில் குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசாங்க அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டதில்லை.
எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல்வாதிகள் அரசாங்க அதிகாரிகள் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியதில்லை.
அவ்வாறான ஓர் பின்னணியில் ரக்கான நிறுவனத்தின் ஊழியர்கள் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி பாரிய மிகவும் பாரிய மோசடி ஒன்று நாட்டில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்தே தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என கோத்தபாய கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
எனது படத்தைப் போட்டு ஊடகங்களில் பாரியளவு நிதி மோசடி இடம்பெற்றமை குறித்து விசாரணை நடத்தப்படுவதாக செய்தி வெளியிடுகின்றீர்கள்,
மக்கள் நினைப்பார்கள் நான் கோடிக் கணக்கில் பணம் மோசடி செய்திருக்கின்றேன் என்று.
பணம் கொள்ளையிட்டமை குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. அரச ஊழியர்களை பயன்படுத்தியமை பற்றியே விசாரணை நடத்தப்படுகின்றது என்பதனை தெளிவாக சொல்லுங்கள் என அவர் ஊடகவியலாளர்களிடம் கோரியுள்ளார்.
