மேல் மாகாண முதலமைச்சராக இசுரு தேவப்பிரியவும், வட மேல் மாகாண முதலமைச்சராக தர்மசிறி தசநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளதோடு, இவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
மேல், வட மேல், ஊவா ஆகிய மாகாணங்களின் முதலமைச்சர்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியதால், குறித்த மாகாணங்களின் முதலமைச்சர் பதவிகள் காலியாகிய அதேவேளை குறித்த பதவிக்கு பலத்த போட்டி நிலவிவந்தது.
இறுதியில் அமைச்சரவையில் இது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று ஐ.ம.சு.முவின் முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தி இத்தீர்மானத்தை எடுத்துள்ளார்.
ஊவா மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தை ஐ.தே.க தக்கவைத்துள்ள நிலையில், தற்போது அதன் அதிகாரம் ஐ.ம.சு.மு வசம் செல்லும் நிலையே காணப்படுகிறது. இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் ஊவா மாகாணத்தின் முதலமைச்சர் பதவி வெற்றிடத்தையும் நிரப்ப எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண முதலமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும், வட மேல் மாகாண சபை முதலமைச்சராக தயாசிறி ஜயசேகரவும், ஊவா மகாண முதலமைச்சராக ஹரீன் பெர்னாண்டோவும் பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
