க.கிஷாந்தன்-
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராணிவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 47 மாணவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் 30.09.2015 இன்று காலை 10 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மேற்படி பாடசாலை அண்மித்த பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயி ஒருவர் மரக்கறிகளுக்கு மருந்துகள் தெளித்துள்ளார். எனினும் மருந்தில் மூலம் வீசிய துர்நாற்றத்தை மாணவர்கள் சுவாசித்ததால் மூச்சுத் தினறல் ஏற்பட்டுள்ளதோடு வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது.
சில மாணவர்கள் மயங்கி விழுந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், லிந்துலை பொலிஸ் உத்தியோகத்தா்களின் உதவியோடு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 47 மாணவர்கள் வைத்திய சிகிச்சை பின் வீடு திரும்பியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
47 மாணவர்களில் 31 மாணவிகளும், 16 மாணவர்களும் இதில் அடங்குகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட லிந்துலை பொலிஸார் மரக்கறி வகைகளுக்கு தெளித்த நஞ்சு மருந்து காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.