தேர்தலுக்கு பின்னரான மட்டக்களப்பின் உணர்வலைகள்...!

முஹம்மத் றிபாஸ்

பாராளுமன்ற தேர்தல் அமைதியாக நடத்து முடிந்துள்ளது, சிறுபான்மை மக்கள் ஆசுவாசப் பட்டுக்கொள்ளக் கூடியவாறு தேர்தல் பெறுபேறுகள் அமைந்துள்ளன. பல தசாப்த அரசியல் தலைமைகளை தோற்கடித்து பல புதிய முகங்களை பாராளுமன்றத்திற்கு மக்கள் தெரிவு செய்துள்ளனர். 

இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் வாக்களர்களின் வாக்குகள் எதிர்பார்த்த அளவிற்கு அளிக்கப் படாமையினால் தமிழ் தரப்பு இம்முறையும் மூன்று பிரதிநிதிகளையே பெற்றுக் கொண்டது. மாறாக முஸ்லிம்களினதும் மற்றும் தேசிய கட்சிகளுக்கான தமிழ் வாக்காளர்களின் வாக்குகளாலும் முஸ்லிம் தரப்பு இரண்டு பிர்திநிதிகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஆயினும் மிகச் சிறிய வாக்கு வித்தியாசத்தில் கிழக்கின் அரசியல் ஜாம்பவான் ஹிஸ்புல்லாஹ் தனது ஆசனத்தை இழந்துள்ளார். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப் பட்டாலும். அவரது அரசியல் தளமான காத்தான்குடியில் சுமார் ஐம்பது வீதமான வாக்குகளையே அவரால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. அபிவிருத்தியின் அடையாளாமாக காத்தான்குடி சித்தரிக்கப் பட்டபோதும் அந்த நகரத்தின் தனிப் பெரும் தலைவனாக ஹிஸ்புல்லாஹ் தன்னை வெளிக் காட்டிக் கொண்டபோதும், பல கோடி ரூபாய்களை தேர்தலுக்காக அவர் அள்ளி இறைத்தபோதும் அவரால் வெற்றி பெற முடியாமல் போனமைக்கான காரணங்கள் சிந்திக்க தக்கவையே.

மாறாக கடந்த தேர்தல்களில் மட்டக்களப்பில் மிகவும் கையறு நிலைக்கு சென்றிருந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனித்து நின்று போட்டியிட்ட ஒரே ஒரு மாவட்டமாக மட்டக்களப்பு இருந்தபோதும் வரலாறு காணாத வெற்றியை இம்முறை மட்டக்களப்பில் பெற்றுக் கொண்டுள்ளது. தலைவர் அஸ்ரபின் காலத்திற்கு பிறகு இம்மாபெரும் வெற்றி முஸ்லிம் காங்கிரசை புளகாங்கிதம் அடையச் செய்து தலை நிமிர வைத்துள்ளது.

இந்த வெற்றியில் முழுமுதற் காரணமாக; மிகவும் சாணக்கியமான முறையில் முஸ்லிம் காங்கிரசும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் செய்துகொண்ட தேர்தல் கூட்டு நோக்கப் படுகிறது. இந்த கூட்டு ஏற்படுத்த படாதிருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறமுடியாது என்பது மட்டுமல்லாமல் ஹிஸ்புல்லாவும் மிக இலகுவாக தனது வெற்றியை உறுதி செய்து கொண்டிருக்கமுடியும் என்பது வெளிப்படையான உண்மையாகும்.

வளர்ந்து வரும் அரசியல் சக்தி என்றவகையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக ஹிஸ்புல்லாவின் அரசியல் தளத்தை மெதுமெதுவாக ஆட்டங்காண வைத்து தற்போதைய அரசியற் கூட்டின் மூலம் வீழ்த்தியுள்ளது என்றால் மிகையாகாது. ஆயினும் இந்த இயக்கம் முன்னிறுத்திய பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இயக்கத்தின் தவிசாளரான அப்துர் ரஹ்மான் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாமற் போனது பொதுவாக மட்டக்களப்பு வாக்காளர்களையும் குறிப்பாக காத்தான்குடி மக்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

அப்துர் ரஹ்மான் நீண்ட காலமாக அரசியல் களத்தில் இருந்தாலும் இந்த தேர்தலுக்கான அறிவிப்பின் பின்னர்தான் இந்நாட்டின் தமிழ் பேசும் மக்களிடத்தில் நன்கு அறிமுகம் செய்யப்பட்டார். அவரது தொலைக்காட்சி விவாதங்களும், மேடைப் பேச்சுக்களும் அவரது ஆளுமையை உலகறியச் செய்தது. இவ்வாறான ஒருவர் பாராளுமன்றம் செல்லவேண்டும் என்பது கிழக்குவாழ் முஸ்லிம் மக்களது மட்டுமலாது தமிழ் மக்களதும் அபிலாஷையாக இருந்தது. ஆயினும் கொள்கைவாத அரசியலுக்கு நம் தேசம் இன்னும் பழக்கப்படவில்லை என்பதை இவரது தோல்வி மட்டுமல்லாது ஜே வீ பீ இனது தோல்வியும் சுட்டி நிற்கின்றன.

எவ்வாறெனினும் தேசியப் பட்டியலிலாவது நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு பாராளுமன்ற ஆசனமொன்றை முஸ்லிம் காங்கிரஸ் வழங்கவேண்டும் எனும் கோசம் தற்போது வலுப்பட்டு வருகிறது. முஸ்லிம் காங்கிரசுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குமான தேர்தல் கூட்டு உடன் படிக்கையில் இந்த விடயம் ஒரு சரத்தாக அழுத்தமற்ற முறையில் குறிப்பிடப் பட்டிருந்தாலும். 

இதனை மிக காத்திரமாக சிந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோள் முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப் பட்டு வருகின்றன. மட்டக்களப்பின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டும், ஹிஸ்புல்லாவின் மீள் வருகையினையும் ரிஷாத் தரப்பின் எழுச்சியினையும் கருத்திற்கொண்டும். முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனது தாயக பூமியான மட்டக்களப்பில் தனது அரசியல் இருப்பை உறுதி செய்ய இந்த கூட்டு நிரந்தரமாகப் படவேண்டும் என இரு தரப்பாரும் மிக அவாவுடன் இருக்கின்றனர். 

இதனை. இம்முறை தேசியப் பட்டியலினூடாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் ஒருவருக்கு குறிப்பாக அப்துர் ரஹ்மானுக்கு பாராளுமன்ற அங்கத்துவத்தை வழங்குவதன் மூலம் உறுதி செய்துகொள்ளமுடியும் என இவர்கள் நம்புகின்றனர். இதனை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் அவர்களுக்கு வலியுறுத்துவதற்காக காத்தான்குடியின் வர்த்தக சமுகம், உலமாக்கள் குழு, பொது மக்கள் குழு என பலர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை தொடர்ச்சியாக சந்தித்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். 

ஹிஸ்புல்லாஹ் அவர்கள் மிக நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கிழக்கு வாழ் மக்களுக்கு குறிப்பாக காத்தான்குடி மக்களுக்கு பல சேவைகளை ஆற்றியுள்ளார். 

இவர் தொடர்பான பல விமர்சனங்கள் இருந்தும் கூட இவரது சேவைகளை முற்றாக மக்கள் நிராகரித்து விடவில்லை ஆயினும் பௌதீக வள அபிவிருத்தியை விட முஸ்லிம் சமுக இருப்பும், தன்மானமும், கௌரவமும் இந்த நாட்டில் கேள்விக்கு உட்படுத்தப் பட்டபோது இவரது நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கின, அதன் தொடராக இலங்கை வாழ் முஸ்லிம் சமுகத்தின் ஓர் அங்கம் என்ற உணர்வுடன்தான் அரசியல் மாற்றத்தை வேண்டி இம்முறை இம்மக்கள் வாக்களித்தனர். 

இதனால்தான் ஹிஸ்புல்லாவின் அரசியல் கூட்டினை நிராகரித்து சமுக உணர்வுடன் செயற்பட்டனர். மட்டக்களப்பின் கல்குடா தொகுதியும் ஏறாவூர் தொகுதியும் தற்போது பல அரசியல் அதிகாரங்களிப் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் காத்தான்குடி பிரதேசம் அரசியல் அனாதையாகியுள்ளதாக இப்பிரதேச மக்கள் அங்கலாய்க்கின்றனர். 

இந்த தவிப்பை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை சரியாக உள்வாங்கி இப்பிரதேசத்திற்கான பிரதிநிதித் துவத்தை வழங்குமா? என்பேதே இப்பகுதி மக்களின் மிகப் பெரும் கேள்வியாகும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -