க.கிஷாந்தன்-
பதுளை - மஹியாங்கனை பிரதான வீதியில் டீசல் கொள்கலன் ஒன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பதுளையிலிருந்து மீகாஸ்கியூல பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் கண்டியிலிருந்து பதுளை நோக்கி சென்ற பவுஸர் ஒன்றும் பதுளை மஹியாங்கனை பிரதான வீதியில் துங்கிந்த நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
15.08.2015 அன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுங்காயங்களுக்குள்ளாகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பவுஸர் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தின் போது கட்டுப்பாட்டை இழந்த பவுஸர் வீதியோரத்தில் குடைசாய்ந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பவுஸரில் இருந்த டீசல் வெளியேறி வீதியில் பரவியுள்ளது. ஏற்பட்ட விபத்தினால் பல மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
பவுஸரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.






