முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி காவற்துறைமா அதிபர் எம்.கே. இலங்ககோனுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டையில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றிற்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட காவற்துறை மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
30 வருடகால போரை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பல முறை தெரியவந்தது எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் மகிந்த ராஜபக்சவிற்கு காவற்துறை மற்றும் இராணுவத்தை சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட பாதுகாப்புபப் பிரிவினரை அரசாங்கம் பாதுகாப்பிற்காக வழங்கியிருக்கின்றது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி தனக்கு இன்னமும் பாதுகாப்பு போதாதென குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி என்றாலும், அவர் தற்பொழுது தேர்தலில் போட்டியிடும் நிலையில் சட்டத்தின் அடிப்படையில் ஓரிரு காவற்துறையினரின் பாதுகாப்பே வழங்கப்படவேண்டும்.
இதனால் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்படும் என்ற பயத்தில் இவ்வாறு தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர் கோரியுள்ளதாக அரசியல் தரப்பில் பேசப்படுகின்றது.
