(எஸ்ஸெம்.சேனையூரான், சமாதானம்,நல்லிணக்கத்திற்கான அமைப்பு)
அட்டாளைச்சேனை,பாலமுனை,ஒலுவில்,தீகவாப்பி ஆகிய ஊர்களை உள்ளடக்கி 25,000க்கு மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட அட்டாளைச்சேனைப் பிரதேசம் சி.ல.மு.காங்கிரசின் அரசியலில் மறைந்த தலைவரினால் புனிதபூமியாக மதிக்கப்பட்டு 'தேசிய மீலாத்விழா' உத்தியோகபூர்வமாக அரங்கேற்றப்பட்ட பிரதேசம்.
மறைந்த தலைவரினால் முன்னெடுக்கப்பட்ட இருபெரும் திட்ட அபிவிருத்திகளான தெ.கி.பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம் என்பவற்றுக்கு களமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மண். இப்பிரதேச மண்ணும் அப்பாவி ஏழைமக்களும் சி.ல.மு.காங்கிரஸ் அரசியல் வளர்ச்சியிலே கொண்டிருந்த வெளிப்பாடான தீராதஆசையும் சமூக ஈடுபாடும் அர்ப்பணிப்பும்தான் மறைந்த பெருந்தலைவரின் தீர்க்க முடிவுகளுக்கான கருவூலமாகும்.
இவ்வரசியல் போராட்ட களத்திலே 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் பிடியில் தங்களது உயிர்களை மாய்த்துக்கொண்ட அட்டாளைச்சேனையைச் சேர்ந்த '12 சஹீத்'களின் தியாகம் அர்ப்பணிப்பின் இமயமாய் மேலோங்கி நிற்கின்றது. ஆயினும் கிழக்கிலே பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரையிலுமுள்ள எல்லாபெரிய ஊர்களுக்கும் கட்சியினால் வழங்கப்பட்டுவந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்மண்ணுக்கு மட்டும் வழங்குவதிலே கடந்த 15வருடகாலமாக காட்டப்பட்டு வரும் முரண்பாடான போக்கு புரிய முடியாததாயுள்ளது.
சில ஊர்கள் இவ்விரண்டு பிரதிநிதிகளைப் பெற்றிருந்த வேளையிலும் இப்பிரதேச மக்கள் இழப்புகளின் மத்தியிலும் இன்னும் பொறுமையுடன் இக்கட்சிக்கான பங்களிப்பிலே காட்டிவரும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இம்மக்களின் நன்குவிருத்தியடைந்த பரந்த உளப்பாங்கினை வெளிக்காட்டி நிற்கின்றது.
சவால்கள் :
விவசாயத்தையும், மீன்பிடியையும் அடிப்படைப் பொருளாதாரமாகக் கொண்ட இப்பிரதேச மக்கள் கடந்தகாலங்களில் அதாவுல்லாவின்,உதுமானின் ஊர்தழுவிய பம்மாத்து குறுகிய அபிவிருத்திகளினால் பாதிப்பிற்கும் பழிவாங்கல்களுக்கும் உட்பட்டனர்.
இப்பிரதேசத்தின் சி.ல.மு.காங்கிரசின் முதன்மைப் போராளிகள் புனையப்பட்ட பொலிஸ் வழக்குகளினால் சிறைகளிலும் பொலிசிலும் அடைக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டனர்.
மேற்கிலே ஆலம்குளம், நுறைச்சோலை, தீகவாப்பி போன்ற இடங்களில் காணிப் பிரச்சினைகளுக்கும், கிழக்கிலே பூரண இயக்கமற்ற மீன்பிடி வாணிபத்துறைமுகம் என்பவற்றினால் அடிப்படை வாழ்வாதாரங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பரிதாபகரமான நிலைமைகளிலும் தமது வாழ்வுகளை இம்மக்கள் ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.
ஆகவே கட்சி அரசியலினால் தனிப்பட்ட முறையிலும் சமுதாயஅடிப்படையிலும் பாதிக்கப்பட்டிருக்கும் இம்மக்களோடு அடிமட்டத்திலிருந்து குறைகள், தேவைகளை மதிப்பீடுசெய்து தன்னலமற்ற சேவையாற்றக்கூடிய ஆற்றல்மிக்க பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இம்முறையிலாவது முன்னுரிமைப்படுத்தி வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை இங்கு மேலோங்கி நிற்கின்றது. ஆயினும் கட்சியும் தலைமைத்துவமும் தமது அரசியல் சதுரங்கவிளையாட்டில் இன்னும் இப்பிரதேச மக்களை பலியாக்க நினைப்பது மறுமையில் இறைவனுக்கு பதில் கூறமுடியாத கேள்வியாக எழுந்து நிற்கும்.
நல்லாட்சி :
ஜனவரி 8ல் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால அவர்களின் தலைமையில் மலர்ந்த நல்லாட்சியின் பெயரால் மற்றுமொரு பொதுத் தேர்தலை கட்சிகளும் நாடும் சந்திக்கவிருக்கின்றது.
இந்நல்லாட்சியை முன்னெடுத்து செல்லும் நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் முஸ்தீபுகள் நடைபெற்றுவருகின்றன.இதற்கிடையில் கடந்த நாடாளுமன்றத்திலே க.பொ.த சாதாரண தரம் சித்தியடையாது 100க்கு அண்மித்தவர்களும், 'ஏ' லெவல் சித்தியடையாதவர்கள் கணிசமானளவு இருந்ததாகவும் ஜே.வி.பியும், 'பப்ரல்'அமைப்பும் ஏனைய நல்லாட்சிக்கான அமைப்புகளும் திடுக்கிடும் தகவல்களை அன்மைக்காலங்களில் வெளியிட்டிருந்தன.
ஆகவே இந்த ஆட்சிக்கான பங்காளிகளின் தகைமைகள் என்ன? என்பதில் காத்திரமான பங்களிப்பினையும், 'மார்ச் 12 அமைப்பு' நாடளாவிய ரீதியில் 10லட்சம் மக்களின் கையொப்பங்களை அதற்காகத்திரட்டி அதன்சாத்திய வளத்தை உறுதிப்படுத்தி வருகின்றது.
உயர்கல்வியுடன் கூடிய அறிவு,ஆற்றல், அனுபவம் கொண்ட சமுதாயத்தில் மக்களால் மதிக்கப்படும் ஒழுக்க நற்பண்புகளைக் கொண்டவர்களே இந்நாடாளுமன்ற சட்டவாக்க சபைக்கு தெரிவுசெய்யப்படல் வேண்டும், சமுதாயத்திலே ஊழல், ஏமாற்று மோசடி செய்து போதைவஸ்து வியாபாரம் போன்ற குறுக்குவழிகளில் பணத்தை சம்பாதித்து மக்களை ஏமாற்றிபிழைப்பவர்கள் இந்நல்லாட்சிக்கான தேர்தலிலே வேட்புமனு வழங்காது நிராகரிக்கப்படல் வேண்டும் என்ற 'பப்ரல்' அமைப்பின் பிரகடனம் பெரிய,சிறிய கட்சிகளினால் கையொப்பமிட்டு ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதுடன் எல்லாத்தரப்பிலும் இக்கோட்பாடு இன்று மேலோங்கி வருகின்றது.
சி.ல.மு.காங்கிரஸ் பெரும்பாலும் ஜ.தே.கட்சியுடன் சேர்ந்து நாடுமுழுவதிலும் களமிறங்குவதற்கான பேச்சுக்கள்,முயற்சிகளிலே முனைப்பாக ஈடுபட்டுவருகின்றது.
சமுதாயத்திற்கான நற்பணிகள் உரிமைகளுக்கான இயக்கமாகவுள்ள இக்கட்சியும் நல்லாட்சிக்காக கற்றறிந்த ஆற்றல், ஒழுக்க பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டவர்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் என்ற அடிப்படைக்கருத்துக்கு உடன்பட்டே செயற்படவேண்டிய தேவையுள்ளது.
கட்சியின் தலைமைத்துவமும் உயர்மட்டமும் இம்முறை ஆகஸ்ட்டில் இடம்பெறும் தேர்தலோடு அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வழங்கிவிடவேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன் செயற்படுவதாக உள்ளக வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் இந்த நல்லாட்சியில் இதற்கு பொருத்தமானவர்? யாருக்கு இந்த சமுதாய அமானிதத்தை வழங்கவேண்டுமென்பதில் நீதி நியாயமாக இறைவனுக்குப் பதில்கூறக்கூடிய முறையில் தலைமைத்துவம் முடிவினை எடுக்குமென்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது.
நன்கு படித்து பல்துறைசார் அனுபவங்களோடு அர்ப்பணிப்புகளோடு கடந்தகால சவால்களுக்கு முகங்கொடுத்து அத்தனையுமிழந்து இப்பணியில் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருக்கும் அட்டாளைச்சேனையின் முதற்பட்டதாரி பழீல் BA அவர்கள் நல்லாட்சி அரசியலுக்கு இலக்கணம் வகுக்கக்கூடியவர் என்றரீதியில் புத்திஜீவிகளும் உலமாக்களும் சமூக முதன்மையாளர்களும் அவரது பெயரை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். இவர்களின் நல்லெண்ணம் நிறைவேற இப்புனித நாட்களில் இறைபிரார்த்தனைகளில் ஈடுபடுவோமாக.
