அநுர யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் மஹிந்த ராஜபக்ச மீது ஏன் இவ்வளவு அன்பு வைத்துள்ளார்கள் என்பது பற்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் லண்டனில் அவருக்கு நெருங்கியவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளும் போதே அவர் இந்த தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
எனது ஆட்சியின் போது எவ்வித குற்றமும் சுமத்தப்படாமல் இருந்த குறித்த இருவருக்கும் பெட்ரோலிய அமைச்சர் பதவிகளை வழங்கி, மோசடி செய்வதற்கு பயிற்சி கொடுத்துள்ளனர். அந்த தகவல்களை ராஜபக்ச கையில் வைத்துக்கொண்டு இருவரையும் ஆட்டி படைக்கின்றார்.
அவ்விருவருக்கும் பதவி வழங்கி பொம்மை போன்று வழிநடத்த முடியும் என்பதனாலேயே சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும், கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவியையும் மஹிந்த வழங்கினார்.
ராஜபக்சவை சுற்றியிருக்கும் அனைவரும் அவர் மீது அன்பு வைத்திருப்பதனால் அல்ல. அவர்களின் ஆவணங்களை வெளியில் கொண்டு வந்துவிடுவார்கள் என்ற பயத்தினால், ராஜபக்ச அவ்வாறே நாட்டை ஆட்சி செய்துள்ளார்.
யார் என்ன கூறினாலும், கடந்த நவம்பர் மாதம் ராஜபக்சவை கைவிட்டு பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வந்த நபர்களுக்கு எனது ஆதரவையும் வழங்குவேன். எங்களுடன் வெளியில் இறங்கிய மக்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும்.
மைத்திரி போன்று நானும் தேசிய அரசாங்கத்திற்காக செயற்படுவேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
