நாட்டின் சம்பிரதாயங்களை மீறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொதுத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி அக்குரணையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் அடுத்த 15 ஆம் ஆண்டுகளுக்கு நான் தான் நாட்டின் பிரதமர் என்று இங்கு தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர் கூறினார்.
ஆனால், நான் மஹிந்த ராஜபக்ச அல்ல, அத்தனை வருடங்கள் பதவியில் இருக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கில்லை. செய்ய வேண்டிய வேலைகளை செய்ததன் பின்னர் நான் வீட்டுக்கு சென்று விடுவேன்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தான் ஆட்சியில் தொடர்ந்தும் இருக்க போவதாக ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியிருந்துடன் அவரை தோற்கடிக்க முடியாது என்றும் நினைத்தார்.
எனினும் நாங்கள் அவரை தோற்கடித்து, தோற்கடிக்க முடியும் என்பதை ஒப்புவித்து காட்டினோம். ஜனவரி 8 ஆம் திகதி நாங்கள் அனைவரும் இணைந்து மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பினோம்.
எனினும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையின் சம்பிரதாயம், உலக சம்பிரதாயங்களை மீறி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமராக வேண்டும் என்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக அவர் போட்டியிடுகிறார். மஹிந்த ராஜபக்ச தற்போது அந்த முன்னணியின் தலைவர் அல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர். அதிகாரம் அவரிடம் உள்ளது.
மஹிந்த ராஜபக்சவை தான் பிரதமராக நியமிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
