அஷ்ரப் ஏ சமத் -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இறைவனின் துணையால் குறுகிய காலத்தில் பெற்ற வளர்ச்சியும் அதனால் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்களையும் கண்டு காழ்ப்புணர்வு கொண்ட சக்திகள் தடுமாறி நிற்கின்றன.
என்னை அரசியலிலிருந்து ஓரம்கட்டி விடலாம் என சிலர் பகற்கனவு காண்கின்றனர் என அக்கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளத்தில் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் பெருந்திரளான மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். கட்சியின் ஆதவாளர்கள், தொண்டர்கள்,
தாய்மார்கள், இளைஞர் யுவதிகள் என பலசாரார் பங்கேற்றிருந்தனர். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்: பதவியை தருபவனும் இறைவனே! அதை பறிப்பவனும் இறைவனே. யார் என்னதான் தலைகீழாக நின்றாலும் இறைவனின் நாட்டமின்றி எதுவுமே செய்ய முடியாது. அகதி முகாமில் ஆரம்பித்த எனது அரசியல் பயணம் இன்று பல்கிப்பெருகி பல்லாயிரக்கணக்கில் பாரிய விழுதுகளுடன் பலமான ஓர் இயக்கமாக வேரூன்றி நிற்கின்றது.
இன்று சிலர் வாக்கு வேட்டைக்காக என்னைப்பற்றி விஷமத்தனமான பிரச்சாரங்களையும் அபாண்டமான பழிகளையும், அவதூறுகளையும் சுமத்தி வருகின்றனர். எனது வாக்கு வங்கியை சரித்துவிட வேண்டுமென மஹிந்தவின் ஏஜண்டுகளும் எமது கட்சியின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத சிலரும் கங்கணம்கட்டி நிற்கின்றனர்.
பொதுத்தேர்தலில் இவர்களுக்கு நமது மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். நான் தேர்;தல் காலத்தில் மட்டும் இந்த பிரதேசத்திற்கு வந்து முட்சந்திகளிலும் கடைத்தெருக்களிலும் மேடையமைத்து கொக்கரித்துவிட்டு செல்பவனல்ல. மக்களின் உணர்வுகளை தூண்டி வீரவசனங்களை பேசி வாக்கு கேட்பவனும் நான் அல்ல.
வன்னி மக்களோடு இரண்டறக் கலந்து அவர்களின் இன்ப துண்பங்களில் பங்கேற்று வாழ்ந்து வருபவன் என்பது நீங்கள் அறிவீர்கள். வாக்குப் பிச்சைக்காக தேர்தல் காலங்களில் மட்டும் இந்த பிரதேசத்திற்கு வந்து சவாரி செய்பவர்களின் மனச்சாட்சிக்கும்- அவர்களுக்கு மனச்சாட்சியென்ற ஒன்று இருந்தால் நன்கு தெரியும்.
சொகுசு வாழ்க்கைக்கோ பட்டம் பதவிகளுக்கோ நான் ஆசைப்பட்டிருந்தால் மஹிந்த அரசின் அமைச்சர் பதவியையும் அதிகாரங்களையும் வசதி வாய்ப்புக்களையும் தூக்கி எறிந்துவிட்டு பொது எதிரணியில் இணைந்திருக்க மாட்டேன்.
முஸ்லிம் சமூகத்தின்மீது மஹிந்த அரசு மேற்கொண்;டு வந்த அடக்கு முறைகளையும் அராஜகங்களையும் இனியும் தாங்கமுடியாது என்ற ஒரேயொரு காரணத்திற்காகவே பதவியை தூக்கியெறிந்துவிட்டு மைத்திரி-ரணிலுடன் கைகோர்த்தேன்.
எனது உயிருக்கு ஆபத்து சூழ்ந்திருந்த வேளையிலும் நான் கொண்ட கொள்கையில் பின்வாங்கவில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மஹிந்த அரசிலிருந்து வெளியான பின்னரே முஸ்லிம்களின் சமூகக் கட்சி என்றும் ஏக பிரதிநிதிகள் என்றும் பீற்றித் திரிந்தவர்கள் விழிப்படையத் தொடங்கினர்.
அவர்களது அரசியல் பயணத்திலே தடுமாற்றங்கள் ஏற்பட்டன. பொதுபலசேன, இராவணபலய போன்ற இனவாத சக்திகளின் அட்டூழியங்களால் மஹிந்த அரசின்மீது வெறுப்புணர்வும் கோபமும் கொண்டிருந்த முஸ்லிம்கள் ஒரே குடையின்கீழ் பொது எதிரணியின் சங்கமமாவதற்கு அரசிலிருந்து நாம் வெளியேறியமையே வித்திட்டது என்று கூறினால் அதில் மிகையொன்றுமில்லை.
நாம் இறைவனை முன்னிறுத்தியே மஹிந்த அரசிலிருந்து வெளியேறியதால் ஆட்சியில் அடுத்தடுத்து சரிவுகள் ஏற்பட்டு அரசு நிலைகுலைந்தது. ஜனவரி 8ம் திகதி புதிய நல்லாட்சிக்கு வித்திடப்பட்டது. இந்த நல்லாட்சியை தொடர்வதற்கு மீண்டும் நீங்கள் எங்களை ஆதரிக்க வேண்டும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் வன்னி, குருணாகல்,அனுராதபுரம், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் திருமலை ஆகிய இடங்களில் தமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. எமது வேட்பாளர்கள் சமூக சிந்தனையும் பற்றுறுதியும் கொண்டவர்கள்.
அத்துடன் முஸ்லிம்களின் முகவெற்றிலையாகக் கருதப்படும் அம்பாறை மாவட்டத்தில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் களம் இறங்கியுள்ளது. சமூக அந்தஸ்து உடையவர்கள், சமூகப் பற்றாளர்கள், கல்விமான்கள், அரசியலில் புடம்போடப்பட்டவர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதால் அம்பாறை முஸ்லிம் பிரதேச அரசியலில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அந்த மாவட்டத்தின் கீரோக்கள் என தம்மை இனங்காட்டி வந்த சக்திகள் இன்று கதிகலங்கி நிற்கின்றன. இந்த அச்சத்தின் காரணமாக மேடைகளில் எதைப்பேசுவதென்று தெரியாமல் வாய்க்கு வந்தபடி எம்மைத் திட்டித்தீர்க்கின்றனர். இறைவன் உதவியால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கான ஆதரவு நாட்டின் நாலாபாகங்களிலும் அலையலையாக திரண்டு வருவது கண்டு இவர்;கள் வெதும்புகின்றனர்.
எமது அரசியல் பயணத்திலே வளர்த்த கடா மார்பில் பாய்ந்த சம்பவமும் இடம்பெற்றிருப்பது கட்சியின் எதிர்கால பயணத்திற்கு படிப்பினையாக அமைந்திருக்கின்றது. சமூகத்திற்காகவே மஹிந்தவை விட்டு அரசிலிருந்து வெளியேறியதாக மார்தட்டிய சில அரசியல் போடுகாலிகள் மீண்டும் இனவாதிகளின் ஊதுகுழலாக, முகவராக வன்னிக்குள் நுழைந்து வாக்குக் கேட்பது கேவலமானது. இவர்கள் குறித்து நீங்கள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்கு முறையான பாடம் புகட்ட வேண்டும்.
நான் அமைச்சராகவும் எம்பியாகவும் பணியாற்றிய காலங்களில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதம் பாராமல் உழைத்திருக்கின்றேன். யுத்தக் கொடூரத்தில் சிக்கி வன்னியிலிருந்து வெளியேறிய மக்களை வவுனியா மெனிக் பாமில் தற்காலிகமாக குடியேற்றி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து நிம்மதியான சூழலை உருவாக்கினேன். தென்னிலங்கையில் சிங்கள பிரதேசங்களில் நடந்த அனர்த்தங்களின் போதெல்லாம் அடுத்த கணமே அங்கு சென்று அவர்களுக்கு உதவியுள்ளேன்.
நான் சார்ந்த முஸ்லிம் சமூகத்திற்கும் என்னாலான உச்சக்கட்ட உதவிகளை நல்கியிருக்கின்றேன். எதிர்வரும் காலங்களிலும் இறைவனின் நாட்டத்தால் என் உதவியை தொடர்ந்தும் மேற்கொள்வேன். இந்த நாட்டிலே ஏற்பட்டுள்ள நல்லாட்சி தொடர்வதற்கு நீங்கள் உதவ வேண்டும். எனவே எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி உங்கள் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர பங்காளிக்கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்;கு வழஙகி நல்லாட்சி தொடர உதவ வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன்.
