ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் -
கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உடுநுவர தேர்தல் தொகுதியிலுள்ள சில கிராமங்களுக்கு சனிக்கிக்கிழமை (25) மாலை சென்றபோது பிரதேச மக்களால் அவருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
முதலில், பட்டுபிட்டியவிற்கு சென்ற அமைச்சர் ஹக்கீமை பள்ளிவாசல் முன்றலில் மக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். அயலூர் மக்களின் வேண்டுகோளையடுத்து அவர் தஸ்கர, பூவெலிகட ஆகிய கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து உரையாடினார்.
இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முதலாம் இலக்கத்தில் போட்டியிடும் தனக்கு விருப்பு வாக்கு ஒன்றை அளிப்பதோடு, இரண்டாம் இலக்கத்தில் போட்டியிடும் அமைச்சர் ஹலீமுக்கும் விருப்பு வாக்கொன்றை வழங்குமாறு அமைச்சர் ஹக்கீம் குழுமியிருந்த மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அமையப்போகும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்திரமான அரசாங்கத்தில் தமக்கு வழங்கப்படும் அமைச்சு மேலும் பலமானதாக இருக்குமென்றும், அதனூடாக குறிப்பாக கண்டி மாவட்ட மக்களுக்கும், பொதுவாக நாட்டு மக்களுக்கும் மிகவும் காத்திரமான சேவைகளை வழங்கக் கூடியதாக இருக்குமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் பள்ளிவாசல் நிருவாகிகள், உலமாக்கள், ஊர் மக்கள் என அநேகமானோர் கலந்துகொண்டனர்.

