நிஸ்மி-அக்கரைப்பற்று-
பொத்துவில் ஊறணிக் கிராமத்திலுள்ள தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணியை சட்ட விரோதமாக அபகரித்தமையை முறையிடச் சென்றபோது பொத்துவில் பொலிஸாரினால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறுகின்றார் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான ஏ.எம்.அப்துல் மஜீத்.
நேற்று முன் தினம் (30) அக்கரைப்பற்று சீலேண்ட் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:
பொத்துவில் ஊறணியில் உள்ள எனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணியினுள் கடந்த மே மாதம் அத்துமீறி நுழைந்த ஹிக்கடுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் (பெரும்பான்மை இனத்தவர்) வெளி நாட்டைச் சேர்ந்த (உக்ரைன்) ஒருவரும் எனது காணியில் நுழைந்து காவலாளியை காணியை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தியதோடு வீட்டின் மின் வாசிப்பு மானியையும் உடைத்து சேதப்படுத்தினார்கள்.
இது தொடர்பாக பொத்துவில் பொலிஸில் கடந்த மே மாதம் 06 ஆம் திகதி முறைப்பாடு செய்தேன். முறைப்பாடு தொடர்பான விசாரணைக்காக பொலிஸ் நிலையம் சென்றபோது காணியின் உரித்து சம்பந்தமான எனது ஆவணங்களைப் பரிசீலனை செய்யாது இந்தக் காணியில் உனக்கு எந்தவித உரிமையும் கிடையாது என்றும் காணியை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் தவறினால் உன்னைக் கைது செய்து ஜெயிலில் போடுவேன் என்றும் மீறினால் தொலைத்து விடுவேன் என்றும் பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என்னை அச்சுறுத்தினார்.
புதன் இது தொடர்பாக நான் காணி உரிமைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்ததோடு இது பற்றி பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர், பொத்துவில் பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் முதலியோர்களுக்கும் முறைப்பாடு செய்ததோடு மேன்மை தங்கிய ஜனாதிபதிக்கும் அறிவித்தேன்.
வழக்குத் தொடுக்கப்பட்டதன் பின்னர் ஒரு நாள் எனது வீட்டுக்கு விசாரணைக்கென வருகை தந்த பொத்துவில் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் ஒருவர் உண்மையில் காணியின் உரிமை உங்களுக்கே உள்ளது. எனினும் இதனைப் பொலிஸ் இன் உதவியின்றி உங்களால் பெறமுடியாது. நான் உங்களுக்கு உதவி செய்கின்றேன் அதற்கு நீங்கள் எனக்கு 25,000.00 ரூபா பணமும் சம்சுங் ரக கைத்தொலை பேசி ஒன்றும் தரவேண்டும் எனக் கேட்டார். தருவதாகக் கூறினேன்.
இலஞ்சம் கேட்டவரை இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரிடம் பிடித்துக் கொடுக்கும் நோக்கில் அவர்களுக்கு அறிவித்து கடந்த மே மாதம் 12 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினருடன் இரகசியமாக சார்ஜன்ட் இற்கு இலஞ்சம் கொடுப்பதற்காகச் சென்றபோது இதனை எப்படியோ அறிந்த பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துப்பாக்கியுடன் வந்து என்னை சுடுவதாகப் பயமுறுத்தினார். அப்போது இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினர் என்னைக் காப்பாற்றினார்கள்.
தொடர்ந்து அடிக்கடி பொலிஸாரினால் எனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.
நான் ஒரு சமாதானக் கல்வி அதிகாரியாகவும், பிரதான கட்சியொன்றின் தொகுதி அமைப்பாளராகவும் கடமையாற்றுகின்றேன் பொலிஸாரின் மரண அச்சுறுத்தல் காரணமாக வீட்டிலோ, ஊரிலோ இருக்க முடியாதுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதால் எனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து வரும் பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை உடனடியாக தற்காலிகமாக இடமாற்றம் செய்து விசாரணைகள் பக்கசார்பின்றி நடைபெற உதவுமாறு பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர், பொத்துவில் பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் முதலியோர்களுக்கும் முறைப்பாடு செய்ததோடு மேன்மை தங்கிய ஜனாதிபதிக்கும் அறிவித்துள்ளேன் என்று மேலும் ஏ.எம்.அப்துல் மஜீத் தெரிவித்தார்

