உள்ளக சுயாட்சி வியூகத்தை ஏற்றுக் கொள்வதாக புலிகளிடமிருந்து தனக்குக் கிடைத்த அறிவிப்பிற்கு உடன்பட்டிருந்தால், 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பது மஹிந்த ராஜபக்ஷ அல்லர், ரணில் விக்கிரமசிங்கவே வெற்றி பெற்றிருப்பார். இது நான் அறிந்த விடயமாகும். ஆனால், அந்தச் செய்தியை ஊடகங்களினூடாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு தவறிவிட்டார்கள்.
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் வியாழக்கிழமை (23) முற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னிணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றும் பொழுது இதனைத் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
தற்பொழுது வெளியிடப்படும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை உற்று நோக்கும் பொழுது, இதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியை முதன்மைப்படுத்திய கூட்டமைப்பினர் வெளியிட்ட விஞ்ஞாபனத்தோடு ஒப்பிட்டு நோக்கும் பொழுது முக்கியமான ஒரு காரணியைக் குறிப்பிட்டுக் கூறவேண்டும்.
இதற்கு முன்னர் சிறுபான்மைச் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியோடு இணையும் போது நாங்கள் அக்கட்சி அதிகாரப் பகிர்வு தொடர்பில் எதனைக் கூறுகின்றது – எவ்வாறு அது தொடர்பான செயல்பாட்டை முன்னெடுக்கின்றது எனப் பார்த்து அது பற்றி கலந்துரையாடி அதனூடாக ஏற்படுத்திக் கொள்ளும் இணக்கப்பாட்டின் மூலம் எட்டப்படும் தீர்மானத்தை அதில் உள்வாங்குவது பற்றி முடிவுக்கு வருவதுண்டு. ஆனால், இப்பொழுது அதில் முன்னேற்றகரமான மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அது, அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் இணைந்து கொண்டதால் வந்த மாற்றமல்ல. வேறு காரணத்தினால் ஏற்பட்டதாகும்.
அதாவது, இன்று சிறுபான்மையினருக்குத் தேவைப்பட்டிருப்பது பாதுகாப்பு. எங்களது சமயத்தை கடைப்பிடிப்பதற்குரிய சுதந்திரம். அவ்வாறே நாட்டின் சமாதானம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பன போன்ற காரணிகள். அதற்காக எங்களது கோரிக்கைகளை நாங்கள் மறந்து விட்டோம் என்பதல்ல. அது தொடர்பான கருத்துப் பரிமாறல்களின் பயனாக நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது என்பதாகும். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக ஐ.தே.கட்சியின் தலைவரோடு முன்னரைப் போன்றே நாங்கள் மீண்டும் ஒன்றுபட்டிருப்பதென்பது முக்கியமான விடயமாகும்.
இலட்சியத்தை அடைவதற்கான இலக்கை நோக்கி பயணித்த ஆளுமை மிக்க ரணில் விக்கிரமசிங்கவின் கருதுகோளோடு இணங்கிச் செயல்பட்ட பலர் இன்று என்னோடு இந்நிகழ்வில் ஒன்றாக கலந்து கொள்கின்றோம். நாட்டை காட்டிக் கொடுத்துவிட்டார்; நாட்டின் இறையாண்மை - ஒருமைப்பாடு என்பவற்றை வெளிநாட்டுச் சக்திகளுக்கு அடகு வைத்து விட்டார் என்றெல்லாம் குற்றம் சாட்டுபவர்கள் இன்னும் அவரைப் பற்றி பல்வேறு இடங்களில் வசைபாட திட்டமிட்டிருக்கலாம். ஆனால் அந்த வாய்ச்சவடால்கள் இனிமேலும் எடுபடாது. மக்களை ஏமாற்றி முன்கொண்டு சென்ற அந்த தவறான செயல்பாட்டை உண்மைத் தன்மை இப்பொழுது வெளிப்படையாகத் தெரிகின்றது.
புலிகளோடு உடன்படிக்கை செய்து, புலிகள் இயக்கத்தோடு உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக்குச் சென்ற அரசாங்கக் குழுவின் உறுப்பினர் ஒருவராக இருந்தவன் என்ற முறையில் இது நாங்கள் நன்கறிந்த காரணியாகும். முன்வைக்கப்பட்ட உள்ளக சுயாட்சி வியூகத்தை ஏற்றுக் கொள்ளுமாறு தனக்குக் கிடைத்த அறிவிப்பிற்கு உடன்பட்டிருந்தால் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பது மஹிந்த ராஜபக்ஷ அல்லர், ரணில் விக்கிரமசிங்கவே. இது நான் அறிந்த விடயமாகும். ஆனால் அந்தச் செய்தியை ஊடகங்களினூடாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு தவறிவிட்டோம். அது தான் உண்மையில் நடந்தது.
அதுமட்டுமல்ல, சுனாமிக்குப் பிந்திய பொறிமுறையை தயாரிக்கும் பொழுதும் அவர் முதுகெலும்புடன் நிமர்ந்து நின்று உறுதியான தீர்மானத்தை மேற்கொண்டார். ஐ.தே.கட்சியை முதன்மைப்படுத்திய கூட்டமைப்பை நாட்டை காட்டிக் கொடுக்கும் அமைப்பினரென படம்பிடித்துக் காட்டும் ஏமாற்று வேலையை இனிமேலும் யாரும் மேற்கொள்ள முடியாது.
இப்பொழுது எங்களுக்கெல்லாம் தேவைப்பட்டிருப்பது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், நாட்டில் அமைதியையும், சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டக் கூடிய சூழ்நிலையாகும்.
அவ்வாறே, வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுக்குள் அள்ளிக்கொண்டு வந்து சேர்க்கும் பொருளாதார திட்டம். அதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு எவராலும் இங்கு சாதிக்கமுடியாது என்பது தான் எங்களது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அதன் மீது தான் இந்த விஞ்ஞாபனம் இன்று முன்வைக்கப்படுகின்றது.
இந்த வேளையில் எங்களோடு ஒன்றுபட்டிருக்கும் வௌ;வேறு கொள்கைகளை கொண்டவர்கள் ஒரே கூட்டணியில் ஒன்றிணைந்திருப்பது நாட்டைப் பாதுகாக்க வேண்டுமானால், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான அரச கொள்கை அதற்கு அனுகூலமாக அமைய வேண்டுமென்பனால் தான்.
நல்லாட்சியை நோக்கிய இந்த பயணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அதிகாரங்களை குறைப்பதற்காக தாமாகவே முன்வந்து மேற்கொண்ட தீர்மானத்தை பெரிதும் பாராட்டுவதோடு, நாம் ஒன்றுபட்டு செயல்படுகின்ற இந்த வியூகம் வெற்றியளிப்பதாக, தேசிய ஐக்கிய முன்னணி வெற்றியை நோக்கி முன் செல்வதாக இலங்கைத் தேசம் வெற்றி வாகைசூடுவதாக என வாழ்த்தி விடைபெறுகின்றேன் என்றார்.
தமிழாக்கம் : ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் -

