ஊவா மாகாண முதலமைச்சராக ஹரேன் பெனாண்டோ செயற்படுவதை தடை செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊவா மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் சாமர சம்பத் தஸாநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஹரேன் பெனாண்டோ சட்ட விரோதமான முறையில் ஊவா முதலமைச்சராக செயற்பட்டு வருவதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறும் அவர் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்கூறிய கோரிக்கையை முன்வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊவா மாகாண சபை முதலமைச்சர் பதவியில் இருந்து ஹரேன் பெனாண்டோவை நீக்கி சசீந்திர ராஜபக்ஷவை நியமிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட குழு தாக்கல் செய்த மனு கடந்த 21ம் திகதி நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
