பேரின்பராஜா சபேஷ்-
தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறிய பல விடயங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டாலும் அதனைத் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஜனநாயக நாட்டில் ஆளுகின்ற ஜனாதிபதியின் உத்தரவை அமுல்படுத்த முடியாத ஒரு திண்டாட்டமான நிலையே இலங்கையில் உள்ளதாகவும் கூறினார்.
மட்டக்களப்பு மயிலம்பாவெளி வாசம் சமூக மேம்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
வாசம் சமூக மேம்பாட்டு மன்றத்தின்; தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதித் தவிசாளர் நி.இந்திரகுமார், உறுப்பினர் இரா.துரைரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தொடர்ந்து உரையாற்றுகையில்
'நாங்கள் எல்லைக் கிராமங்களில் இருக்க வேண்டும் என்று கருதுகின்றோம் ஆனால் அந்த கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து நகர்பகுதிகளில் நல்ல சூழலில் இந்த பிள்ளைகள் கல்வி கற்று நல்ல நிலையை அடைந்துள்ளார்கள். நாங்கள்; கல்வியையும் தமிழின உணர்வையும் இழக்கக் கூடாது.
எமது மாவட்டத்திலே பல சட்ட விரோத குடியேற்றங்கள் நடைபெறுகின்றன அதிலே நாங்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் இந்த குடியேற்றங்களை தடுக்கக் கூடியவர்கள் யார் என்பதை அறிந்து செயற்பட வேண்டும் இலையேன் பதுளை வீதியில் ஆரம்பித்த குடியேற்றம் செங்கலடியை வந்தடைந்து விடும் இதில் நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும்
எமது பிரதேசத்திலே பல கட்சிகள் வரலாம் இவர்கள் வெறுமனே தமிழ் மக்களின் வாக்குகளை சிதைப்பதற்காக வருகிறார்கள் யார் உணர்வார்கள் என்பதை அறிந்து செயற்பட வேண்டும். அந்த அவதானம் இல்லாவிட்டார் நாங்கள் எல்லாவற்றையும் இழப்பவர்களாக மாறிவிடுவோம்.
எமது நாட்டிலுள்ள ஏனைய மாவட்டங்கள் பல்வேறு சாதனை படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் வடக்கு கிழக்கிலே அதிகூடிய போதைவஸ்து பழக்கமுடைய மாவட்டமாக யாழ் மாவட்டமும் அதிகூடிய மதுபாவனை பாவிக்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டமும் காணப்படுகிறது எமது தமிழ் பிரதேசங்ளை பாரம்பரியம் காலசாசாரங்களை சீரழிப்பதற்காக திட்டமிட்ட முறையில் போதைவஸ்துகள் அனுப்பட்டுள்ளன.
தற்போது நாட்டில் நல்லாட்சி வந்துள்ள கூறுகிறார்கள் ஆனால் நல்லாட்சி வரவில்லை நல்லாட்சிக்கான கதவு திறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த ஆட்சியிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்காளர்களாக இருந்தாலும் கூட முழுமையாக பங்குபற்றவில்லை ஒரு சில விடயங்களில் விட்டுக்கொடுக்கின்றவர்களா இருக்கின்றோம். வடகிழக்கு தாயகத்திலே நில அபகரிப்புகள், மீள்குடியேற்றங்கள், சிறைக் கைதிகளை விடுதலை செய்தல் போன்ற விடங்களை தேசிய பிரச்சினையாக எடுத்து நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறிய பல விடயங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு முயற்சிகள் மேற்கொண்டாலும் அதை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்கின்ற கூழ்நிலையே காணப்படுகிறது. சம்பூரில் காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட போது ஜனாதிபதி அதற்கான ஒப்புதலில் கையொப்பமிட்டிருந்தார். ஆனால் அதற்கெதிரான தடை உத்தரவை கொண்டுவந்துள்ளார்கள். எமது தலைவர் சம்மந்தன் ஐயா அவர்கள் நீதிமன்ற வழக்கில் ஆஜராகி தடை உத்தரவை நீக்கியபோதும் இன்று அந்த காணிகளுக்குள் செல்ல தடைபோடுகிறார்கள்.
ஜனநாயக நாட்டில் ஆளுகின்ற ஜனாதிபதியின் உத்தரவு என்பது எல்லோரும் அனுசரித்துச் செல்லக் கூடிய விடயமாகவுள்ளது ஆனால் இலங்கையைக் பொறுத்தமட்டில்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கட்டளையிட்டாலும் அதனை அமுல்படுத்த முடியாத ஒரு திண்டாட்டமான நிலையே காணப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் எவ்வாறு இணைந்துள்ளது என்பதற்கு இந்த விடயம் ஒரு எடுத்துக்காட்டாகும்.
தற்போது துப்பாக்கிகள் இல்லை நாங்கள் சுதந்திரமாக செல்ல முடியும் என்று கூறுகிறார்கள் ஆனால் கடந்த 26ஆந் திகதி சமூகசேவை உத்தியோகத்தர் மண்டூரில் இரண்டு துப்பதக்கி நபர்களால் பகல் வேளையில் சூட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்று பத்து நாட்கள் கடந்துள்ள நிலையிலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் நல்லாட்சி எவ்வாறு உள்ளது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்' என்றார்.



