தேர்தல் முறை மாற்றம் குறித்த திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்பார்த்துள்ளதாக, நிதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேபோல் நூறுநாள் வேலைத்திட்டத்தில் செய்ய வேண்டியவைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், பாராளுமன்றத்தை தொடர்ந்தும் நடத்திச் செல்வது பயனற்ற பெறுபேறுகளையே தரும் என இங்கு கூறிய அவர், அரசாங்கத்தின் நிலைப்பாடு பாராளுமன்றத்தை கலைப்பதே எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சியினரால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை பயனற்ற செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் அரசாங்கம் கலைக்கப்படும் என கூறியுள்ள நிலையில், எதிர்க்கட்சியினரால் இவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளமையானது, ஜனநாயகம் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்த புரிந்துணர்வு இல்லாமையையே தௌிவுபடுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
